India

“மாநிலங்களுக்கும் நிதி இல்லை; மக்களுக்கும் திட்டம் இல்லை” - பா.ஜ.க அரசை சாடும் நாராயணசாமி!

ஏழை மக்களுக்கு நிதி வழங்குவது குறித்து மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்பில் எவ்வித அம்சமும் இல்லை என்றும் புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் தொற்று இல்லா பச்சை மண்டலமாக மாற்றம் அடைந்துள்ளதாகவும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது :

“புதுச்சேரியில் நேற்று 41 பேருக்கு உமிழ்நீர் சோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவருக்கு தொற்று இருந்தததால் அவர் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவருக்கு கொரோனா நோய் தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆரஞ்சு மண்டலமாக இருந்த காரைக்கால் தற்போது பச்சை மண்டலமாக உள்ளது. தற்போது புதுச்சேரியில் 3 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகள் தற்போது பச்சை மண்டலமாக உள்ளது. உமிழ்நீர் பரிசோதனையில் புதுச்சேரி இரண்டாவது இடத்தில் உள்ளது. 1 லட்சம் பேரில் 398 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்து வருகின்றோம்.

நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில அறிவிப்புகளைச் செய்தார். அதில் சிறு குறு நிறுவனங்களின் கடன் குறித்து பல அறிவிப்புகளை அறிவித்திருந்தார். 3 லட்சம் கோடியில் வாராக்கடன் இருக்கின்ற தொழிற்சாலைகளுக்கு கடன் வழங்குதல், கட்டுமான பணிகளுக்கு சில சலுகைகளை அறிவித்துள்ளார். இதில் மக்கள் எதிர்பார்க்கின்ற, ஏழை எளிய மக்களுக்கு நிதியை உருவாகின்ற அம்சம் எதுவும் இல்லை.

கூலி வேலை செய்பவர்கள் , அமைப்புசாரா தொழிலாளர்கள், விவசாயிகள், 12 கோடி மக்களுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். மாநிலத்தின் வருவாய் தற்போது குறைந்துள்ளது. மாநிலத்தின் நிதி வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு நிதி வழங்கவேண்டும் என்று கேட்டிருந்தோம். ஏழை மக்களுக்கு நிதியை எப்படி கொடுப்பார்கள் என்று அறிவிப்பு இல்லை. 1 லட்சம் கோடியை நிதிச் சுமையால் தடுமாறும் மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். அதுகுறித்த அறிவிப்புகள் இல்லை.

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதற்கு மக்களிடம் இருந்து பல கோரிக்கைகள் வந்துள்ளன. பிரதமர் 17 ம் தேதி அறிவித்தபின்பு புதுச்சேரியில் அறிவிப்போம். மக்கள் பொறுப்புடன் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Also Read: ஒரே மாதத்தில் 20-29 வயதுக்குட்பட்ட 2.7 கோடி பேர் வேலையிழப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்- விளைவு என்னாகும்?