India

உணவுடன் ஊதியமும் கொடுக்கும் ஒடிசா அரசு... புலம்பெயர் தொழிலாளர்களை மகிழ்வித்த நவீன் பட்நாயக்! #LOCKDOWN

கொரோனாவை தடுக்கும் நடவடிக்கையில் கேரளாவுக்கு அடுத்தபடியாக நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா மாநில அரசு திறம்பட ஈடுபட்டு வருகிறது. ஆகையால் அந்த மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மொத்தம் 414 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்தும், 85 பேர் குணமடைந்தும் உள்ளனர். எஞ்சியுள்ளவர்கள் அனைவரும் சீரான உடல் நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஊரடங்கு நடைமுறையில் உள்ளபோது மக்களுக்கு எவ்வித இன்னல்களும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் திண்ணமாக இருந்த நவீன் பட்நாயக், அவர்களுக்கான அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றத் தவறவில்லை.

Also Read: “புலம்பெயர் தொழிலாளர்களை மீட்க ஒடிசா அரசு செய்ததை எடப்பாடி அரசு செய்யாதது ஏன்” : முத்தரசன் சாடல்!

அதேபோல, தற்போது அரசு முகாம்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் புதிதாக வேலைவாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்து வருகிறார் முதலமைச்சர் நவீன் பட்நாயக். ஊரடங்கால் வேலையின்றி உள்ள தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் சென்றாலும் பிழைப்புக்கு வழியில்லை என்பதால் ஒடிசாவிலேயே தனிமை முகாம்களில் உள்ளனர்.

அவ்வாறு சொந்த ஊருக்குச் செல்ல விருப்பம் இல்லாதவர்களுக்கு கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு சிறப்பு பயிற்சிகளை வழங்கி வருகிறது ஒடிசா மாநில அரசு.

மேலும், கொரோனா குறித்த அடிப்படை பாதிப்புகள் என்ன, வைரஸ் தொற்று எப்படி பரவுகிறது, தனிமனித இடைவெளி எந்த அளவுக்கு கடைபிடிக்க வேண்டும், மாஸ்க், கையுறைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், முறையாக கை கழுவது எப்படி என்பன போன்ற பழக்க வழக்கங்கள் அனைத்தும் முகாம்களில் உள்ள தொழிலாளர்களுக்கு கற்றுத்தரப் படுகிறது.

தினந்தோறும் காலை உணவு முடித்த பிறகு இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக தொழிலாளர்களுக்கு ஊதியத்தையும் ஒடிசா அரசு வழங்குகிறது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல், உணவு கிடைக்காமல் அல்லல்பட்டு வரும் நிலையில் ஒடிசாவில் பிரமாதமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது பெரும் முன்னுதாரணமாகவே திகழ்கிறது.

ஒடிசாவைப் போன்று அனைத்து மாநிலங்களிலும் அடைபட்டுள்ள தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்து உணவுடன் சேர்த்து வேலையும் கொடுத்தால் அவர்கள் செய்யமாட்டேன் எனக் கூறிவிடவா போகிறார்கள்?

Also Read: கொரோனா மையத்தின் அடிப்படை நோக்கத்தையே நசுக்குவதா? - மருத்துவர்கள், சுகாதாரச் செயல்பாட்டாளர்கள் வருத்தம்!