தமிழ்நாடு

கொரோனா மையத்தின் அடிப்படை நோக்கத்தையே நசுக்குவதா? - மருத்துவர்கள், சுகாதாரச் செயல்பாட்டாளர்கள் வருத்தம்!

கொரோனா தனி சிகிச்சை மையங்களில் சரியான உணவு, மருத்துவப் பராமரிப்பு இல்லையென பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் இறங்கிவருகின்றனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையில் கொரோனா தொற்றுடன் அறிகுறி இல்லாதவர்களுக்கான தனி சிகிச்சை மையங்களில் சரியான உணவு, மருத்துவப் பராமரிப்பு இல்லையென பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் இறங்கிவருகின்றனர்.

கொரோனா கொள்ளை நோய் தொற்றியவர்களில் அனைவருமே அரசின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை வடசென்னை ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமந்தூரார் மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி (சென்ட்ரல் ரயில்நிலையம் எதிரில் உள்ள இராஜீவ்காந்தி) மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைப் பிரிவுகள் செயல்படுகின்றன. கடந்த வாரம் இந்தப் பிரிவுகளில் உள்ள படுக்கைகள் நிரம்பிவழிந்ததால், தொற்று இருப்பவர்களில் அறிகுறி இல்லாதவர்களுக்கு தனியான இடங்களில் சிகிச்சை மையங்கள் அமைத்து பராமரிக்கலாம் என முடிவுசெய்யப்பட்டது. இரு வாரங்களுக்கு முன்னர் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இதுகுறித்து அனுப்பிய அறிவுறுத்தலின்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சென்னையில் கொரோனா கொள்ளை நோய் தொற்றியவர்களிண் எண்ணிக்கை, இன்றைய நிலவரப்படி 3,043 பேர். இவர்களில் 2,644 பேருக்கு மருத்துவமனைகள், கோவிட் சிகிச்சை மையங்கள், வீடுகள் என பல இடங்களிலும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. முன்னதாக, நகரின் நான்கு முன்னணி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 753 பேருக்கு அறிகுறிகள் இல்லாதநிலையில், அவர்கள் தனியாக கோவிட் சிகிச்சை மையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

கொரோனா மையத்தின் அடிப்படை நோக்கத்தையே நசுக்குவதா? - மருத்துவர்கள், சுகாதாரச் செயல்பாட்டாளர்கள் வருத்தம்!

நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி, அரும்பாக்கம் து.கோ. வைணவக் கல்லூரி, நந்தம்பாக்கம் வணிக வளாகம், கிண்டி இந்தியத் தொழில்நுட்பக் கழகம், செம்மஞ்சேரி சத்யபாமா பல்கலைக்கழகம், செயிண்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் கோவிட் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் லயோலா கல்லூரி மையத்தில் வழங்கப்பட்ட உணவு மோசமாக இருந்தது என்று சில நாள்களுக்கு முன்னர் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் காவல்துறையினர் வந்து சமாதானம் செய்தனர்.

அதைத் தொடர்ந்து, நந்தம்பாக்கம் வணிக வளாகத்தில் கொரோனா தொற்றுள்ளவர்கள் உணவை மறுத்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையில் தரப்பட்டதைவிட மோசமான உணவு வழங்கப்படுவதாகவும் குளிக்கும் வசதியும் சரியாக இல்லையென்றும் அவர்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர். அதைவிட முக்கியமாக, காற்றோட்டம் இல்லாத நிலையில் தாங்கள் வைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் வேதனைப்பட்டனர். இதுதொடர்பாக பணியில் இருக்கும் மருத்துவத் துறையினரிடம் அவர்கள் கூறியும் ஒன்றும் நடவடிக்கை எடுக்கப்படாததால் அவர்கள் கோபமடைந்து, உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவர்கள் யாருமே தங்களைப் பார்க்க வரவில்லை என்றும் செவிலியர்களே பணியில் உள்ளனர் என்றும் தங்களுக்கு என்னவிதமான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதைக்கூடத் தெரிந்துகொள்ள முடியாத நிலை இருப்பதாகவும் அவர்கள் புகார் கூறினர். நோயாளிகள் தொடர்ந்து பிரச்னையில் ஈடுபட்டதால், அங்கிருந்த மருத்துவப் பணியாளர்கள் அப்பகுதி போலிஸுக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் போராட்டம் நடத்திய நோயாளிகளுடன் தொலைவிலேயே இருந்துகொண்டு ஒலிபெருக்கி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்களின் பதிலால் சமாதானம் அடையாத நோயாளிகள் மேலதிகாரிகளை வரச்சொல்லி முழக்கமிட்டனர்.

பின்னர், சென்னையில் சில கோவிட் தொற்றுப்பரவலைத் தடுக்கும் பணிக்கான சிறப்பு அதிகாரி இராதாகிருஷ்ணன், கோவிட் சிகிச்சை மையங்களை நேரடியாகப் பார்வையிட்டார். அங்குள்ள பணியாளர்களிடம் நிலவரத்தைக் கேட்டறிந்து சில உத்தரவுகளை வழங்கினார்.

பொதுவாக, மருத்துவமனைகளில் மருத்துவர்களோ மருத்துவப் பணியாளர்களோ நோயாளிகளை கவனிப்பதும் கட்டுப்படுத்துவதுமாக இருக்கும். ஆனால் இங்கு மருத்துவர்களே அரசு நிர்வாகத்தின் சொல்படி நடக்கவேண்டிய சூழல் இருப்பதால் அவர்களால் நோயாளிகளைக் கையாள முடியவில்லை. கொரோனா நோயாளர் பராமரிப்பு மையங்களில் நிர்வாக அலட்சியத்தின் காரணமாக, இந்தத் திட்டம் கொண்டுவந்த நோக்கமே நிறைவேற முடியாதபடி பயனற்றதாகிவிடுமோ என சுகாதாரச் செயல்பாட்டாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories