India

“மே 17க்கு பிறகு என்ன திட்டம் வைத்திருக்கிறது பா.ஜ.க அரசு?” - சோனியா காந்தி கேள்வி! #CoronaLockdown

ஊரடங்கை மே 17-ம்தேதி வரையில் மத்திய அரசு நீட்டித்துள்ள நிலையில், அதற்குப் பின்னர் என்ன செய்யப் போகிறீர்கள் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டார். காணொளிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், கொரோனா பாதிப்பால், மாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை, அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி சோனியா காந்தி கேட்டறிந்தார்.

ஒவ்வொரு மாநில முதல்வர்களுடம் தங்களது மாநில பிரச்னைகளை சோனியாவிடம் எடுத்துரைத்தனர். ஊரடங்கை மேலும் நீட்டித்தால் பொருளாதார பிரச்னை அதிகமாகும் என்பது அவர்களது கருத்தாக இருந்தது.

முதல்வர்களுடனான இந்தக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, “மே 17-ம் தேதிக்கு பின்னர் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? நிலைமையை அரசு எப்படி கையாளும்? எதன் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிக்கப்படும்?” என்பது உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்துள்ளார்.

பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் இதுகுறித்து கூறுகையில், "டெல்லியில் இருந்துகொண்டு நோய் கட்டுப்பாடு பகுதிகளை மத்திய அரசு வகைப்படுத்தி வருகிறது. ஆனால் களத்தில் என்ன நடக்கிறது என்பது அரசுக்கு தெரியவில்லை" என்று விமர்சித்துள்ளார்.

மாநிலங்கள் மிக மோசமான நிலையை அடைந்தபோதிலும் மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கவில்லை என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

Also Read: “கொரோனா ஒழிப்பில் முழுமையாகத் தோல்வியடைந்த அ.தி.மு.க அரசு ” - உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!