தமிழ்நாடு

“கொரோனா ஒழிப்பில் முழுமையாகத் தோல்வியடைந்த அ.தி.மு.க அரசு ” - உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடைகளைத் திறப்பது மக்களின் மீது அக்கறையற்ற அபத்த செயல் என உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

“கொரோனா ஒழிப்பில் முழுமையாகத் தோல்வியடைந்த அ.தி.மு.க அரசு ” - உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் கொரொனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், நாளை (மே 7) முதல் டாஸ்மாக்கை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி ஆகிவிட்டது.

கொரோனா அச்சுறுத்தல் நிலவும் சூழலில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது என தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், டாஸ்மாக் திறப்பு குறித்து தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

“தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த 40 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறதே தவிர குறைந்தபாடில்லை.

பாதிக்கப்பட்டவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தனிமைப்படுத்தாதது, கரோனா சோதனைகள் குறைவாக நடத்தப்பட்டது, ஊரடங்கைச் சரியாக நடைமுறைப்படுத்தாதது என்று இதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம். இந்த நிலையில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை நாளை முதல் (7ம் தேதி) திறக்கப்போவதாக அரசு அறிவித்துள்ளது.

‘கொரோனாவை கட்டுப்படுத்த அரசிடம் போதுமான நிதி இல்லை, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் திறந்துள்ள மதுக் கடைகளில் நம் மக்கள் மது வாங்கக் கூடுகின்றனர். இதனால் நமக்கு வரவேண்டிய வருமானம் அவர்களுக்குப் போகிறது. அதனால்தான் இங்குக் கடைகளைத் திறக்கிறோம்’ என்று அதற்குக் காரணங்கள் வேறு சொல்கின்றனர்.

“ஊரடங்கிலும் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதைக் கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் இளைஞரணியினர் கருப்புச் சின்னம் அணிந்து தங்களின் வீட்டின் முன்பு நின்று கொரோனா ஒழிப்பில் தோல்வியடைந்த அ.தி.மு.க அரசுக்கு எதிராக முழக்கமிட வேண்டும்.” - உதயநிதி ஸ்டாலின் #TASMAC #CoronaLockdown #EPSFails

நமக்கு வரவேண்டிய நிதியை மத்திய அரசிடம் கேட்டுப்பெறத் தகுதியற்ற எடப்பாடி அரசு, கொரோனா பாதித்த நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கவே டாஸ்மாக் கடைகளைத் திறப்பதாகக் கூறியுள்ளது மக்களின் மீது அக்கறையற்ற அபத்த செயல்.

அதாவது ஒருபக்கம் நோயைக் குணப்படுத்த மருத்துவம் பார்ப்பது, மறுபக்கம் டாஸ்மாக்கில் கூடுபவர்கள் மூலம் நோயைப் பரப்புவது… இதுதான் அடிமை அரசின் கொள்கையா? தவிர, ஊரடங்கினால் கையிலிருந்த சேமிப்பெல்லாம் கரைந்துபோய் வெறுங்கையுடன் உள்ள அப்பாவி பொதுமக்களிடம் எஞ்சியிருக்கும் மான மரியாதையையும், பொருளையும் பறிக்கவே இந்த டாஸ்மாக் கடை திறப்பு என்று தெளிவாகத் தெரிகிறது.

அரசின் இந்த கொரோனா ஊழலுக்கு தி.மு.க தலைவர் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் அதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்கும் நிலையில் அரசு இல்லை.

“கொரோனா ஒழிப்பில் முழுமையாகத் தோல்வியடைந்த அ.தி.மு.க அரசு ” - உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

இந்தநிலையில், மதுபானக் கடைகளைத் திறப்பதில் ஆர்வத்துடன் செயல்படும் தமிழக அரசைக் கண்டித்தும், மாநில அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்காததைக் கண்டித்தும்; மே 7-ம் தேதி ஒருநாள் மட்டும் கருப்புச் சின்னம் அணிவது என்றும்; அன்று காலை 10 மணிக்கு அவரவர் இல்லத்தின் முன் ஐந்து பேருக்கு மிகாமல் பதினைந்து நிமிடங்கள் நின்று, ‘கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அ.தி.மு.க அரசைக் கண்டிக்கிறோம்’ என முழக்கமிட்டுக் கலைவதென்றும்; தி.மு.க தலைவர் தலைமையில் நம் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து பேசி முடிவெடுத்துள்ளனர்.

அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் நம் இளைஞரணி தோழர்கள் கருப்புச் சின்னம் அணிந்து தங்களின் வீட்டின் முன் ஐந்து பேருக்கு மிகாமல் சமூக இடைவெளியுடன் நின்று, கரோனா ஒழிப்பில் தோல்வி அடைந்த அ.தி.மு.க அரசைக் கண்டித்து முழக்கமிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், கரோனா ஒழிப்பில் அதிமுக அரசு காட்டும் அலட்சியத்தைப் பொதுமக்களிடம் எடுத்துக்கூறி இந்த போராட்டத்தில் அவர்களையும் பங்கெடுக்கச் செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்”

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories