India

கொரோனா பாதிப்பு மண்டலங்கள் : “மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் முடிவெடுப்பதா?” - நாராயணசாமி ஆவேசம்!

மத்திய அரசு ஊரடங்கு குறித்தான முடிவை மாநில அரசிடம் விட்டுவிட வேண்டும்,மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு சிவப்பு, ஆரஞ்சு மண்டலம் என அறிவித்துள்ளது. இதனை மாநில அரசு முடிவெடுக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

இன்றைய தினம் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்த சந்திப்பின்போது நாராயணசாமி பேசுகையில், “கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கோயம்பேடு பகுதியில் இருந்து வந்தவர்களிடம் சோதனை செய்யப்பட்டது.

புதுச்சேரி அருகே உள்ள அண்டை மாவட்டத்தில் இருந்து வருபவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர். இதற்காக காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் முனைப்போடு செய்யப்பட்டு வருகின்றார்கள். அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து ரத்தம் சுத்திகரிப்பு, நீரிழிவு நோயில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவு வருகின்றார்கள்.

அவர்கள் உரிய மருத்துவச் சான்றிதழுடன் வந்தால் அனுமதிக்க முடிவெடுத்துள்ளோம். மே 17க்கு பிறகு ஊரடங்கு நீடித்தால் மாநிலத்தின் வருவாய் பாதிக்கப்படும். மத்திய அரசு இந்த சூழ்நிலையில் உதவ முன்வரவேண்டும். மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு சிவப்பு, ஆரஞ்சு மண்டலம் என்று அறிவித்துள்ளது. மாநில அரசு இதற்கு முடிவெடுக்க வேண்டும்.

ஒருசில இடங்களில் 30 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவருக்கு தொற்று இருந்தால் அந்த தெருவை மட்டும் தனிமைப்படுத்த வேண்டும். மத்திய அரசு மண்டலங்களை அறிவிக்கும் போதும் மாநிலங்களை கலந்து ஆலோசித்துக்கொண்டு அறிவிக்க வேண்டும். இதனை மாநிலத்தின் கையில் விட்டுவிட வேண்டும்.

மேலும் இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மாணவ மாணவிகளை அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டு ஒரு தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் படிப்பவர்கள் தங்களது மாநிலங்களுக்குச் செல்ல கோரிக்கை வைத்துள்ளார்கள். வெளிமாநிலத் தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளோம். இதற்கான அனைத்து செலவுகளும் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உள்ளோம். மத்திய அரசு ஊரடங்கு குறித்தான முடிவை மாநில அரசிடம் விட்டுவிட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Also Read: மாநில உரிமைகளை அடகு வைத்த எடப்பாடி - மத்திய அரசிடம் சண்டைக்குப் போகும் சந்திரசேகர ராவ்!