India

"ரயில்கள் இன்று ஓடும் என வெளியான தகவலால் குவிந்த புலம்பெயர் தொழிலாளர்கள்”- போலிஸ் தடியடி! #CoronaLockdown

மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நாளையுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் மே- 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்தார். இதனால், ஊரடங்கு முடிவடைந்ததும் சொந்த ஊர்களுக்குச் செல்லக் காத்திருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பணியாற்றிய புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கு முன்பாக ரயில் இயக்கப்படும் எனப் பரவிய வதந்தியை நம்பி அங்கு கூடிய அவர்கள், ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், ரயில்கள் இயக்கப்படாது எனவும் தெரியவந்ததால் ஆத்திரமடைந்தனர்.

தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலிஸார், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.

ஊரடங்கை அறிவிப்பதற்கு முன்னர் சரியான திட்டமிடல்களைச் செய்யவில்லை என மோடி அரசு மீது குற்றம்சாட்டப்படுகிறது. பா.ஜ.க அரசின் அவசர அறிவிப்பால் வெளி மாநிலங்களில் வசித்த பலர் இன்னல்களுக்கு ஆளாகி உயிரிழக்கவும் நேரிட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read: “நாம் யாரோடு போட்டி போடுகிறோம் தெரியுமா?” : கொரோனா பரிசோதனை விவகாரத்தில் பா.ஜ.க-வை வெளுக்கும் ராகுல்!