India

ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் தமிழகத்திற்கு துரோகமிழைத்த மோடி அரசு - வாய்மூடி மவுனம் காக்கும் எடப்பாடி!

கொரோனா வைரஸ் தொற்றை 30 நிமிடங்களில் கண்டறியக் கூடிய ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனை கருவிகள் ஏப்ரல் 9-ம் தேதி இரவு தமிழகத்திற்கு வந்துவிடும் என்று முதல்வர் பழனிசாமி கூறிய நிலையில், ரேபிட் டெஸ் கருவிகள் இன்னும் இந்தியாவிற்கு வந்து சேராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இந்தியாவில் மேலும் கொரோனா தொற்று அதிகமாகி சமூக பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும் என அச்சம் எழுந்துள்ளது. மேலும். இதற்கு யார் காரணம் என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் இயல்பாக எழத்துவங்கியுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளும் உயர்ந்துள்ளது.

அதிலும் குறிப்பாக, இந்தியாவில் தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. இதனால் நோய் தொற்றைக் கட்டுப்படுத்தவேண்டிய இக்கட்டான சூழலில் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை பரிசோதனையின் மூலம் கண்டறிந்தால் மட்டுமே அடுத்தகட்ட சிகிச்சையை அளிக்கமுடியும்.

ஆனால் பரிசோதனை செய்வதற்கு தமிழகத்தில் 19 கொரோனா பரிசோதனை கூடங்கள் மட்டுமே உள்ளது. அங்கேயும் நாள் ஒன்றுக்கு 600 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்ய முடிகிறது. இந்த நிலை நீடித்தால் சமூக பரவல் வேகமாக பரவக்கூடும்.

இந்நிலையில் தான், 30 நிமிடங்களில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியக் கூடிய ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனை கருவிகளை சீனாவிடம் இருந்து வாங்கி தமிழகத்தில் பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி சுமார் 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்களை ஆர்டர் கொடுக்கப்பட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

ஆனால், மத்திய அரசின் அறிவிப்பால் குழப்பம் ஏற்பட்ட நிலையில், தமிழகத்துக்கு வர வேண்டிய ரேபிட் டெஸ்ட் கருவி அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது இந்த இக்கட்டான சூழலில் மாநில அரசின் சில முடிவுகளில் தலையீடாமல் இருக்கவேண்டிய மத்திய அரசு, திடீரென ரேபிட் டெஸ்ட் கருவியை மாநிலங்கள் நேரடியாக வாங்க தடை விதித்தது.

அதுமட்டுமின்றி, மத்திய அரசு சார்பில் 10 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்க இருப்பதாகவும், அப்படி வாங்கிய பிறகுதான் கருவிகளில்தான் தமிழகத்துக்கு பிரித்து தரப்படும் என்றும் கூறியுள்ளது. அதனைவிட அதிர்ச்சி சம்பவம் என்னவென்றால், மாநில அரசு தன்னுடைய நிதியில் இருந்து ஒதுக்கி தமிழகத்துக்கு வாங்கும் கருவிகளை கூட நாங்கள் தான் மாநிலங்களுக்கு பிரித்து தருவோம் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

அரசின் இந்த நடவடிக்கை எவ்வளவு மோசமானது என செய்தியை படிக்கும் அனைவருக்குமே தெரியும். ஆனால் இது தொடர்பாக தற்போதுவரை மத்திய அரசின் செயல்பாட்டுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவிக்கவில்லை.

இந்த குளறுபடிகளுக்கு மத்தியில், தமிழகத்துக்கு வர வேண்டிய கருவிகளை அமெரிக்காவுக்கு அனுப்பி விட்டதாகவும், அதனால் தமிழகத்திற்கு வரவேண்டிய கருவிகள் கால தாமதமாக வரும் என்று கூறப்படுகிறது. இதனால் , ஐ.சி.எம்.ஆர் அறிவித்த ஏப்ரல் 14 ஆம் தேதிக்குள் இரண்டரை லட்சம் பேருக்கு சோதனை என்ற திட்டம் தாமதமடைந்துள்ளது.

இதனால் தற்போது நடைமுறையில் உள்ள பி.சி.ஆர் சோதனை ஆய்வகங்களை 300 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதன் மூலம் தற்போதைக்கு நாள்தோரும் 15,000 பேருக்கு சோதனை என்பதை ஒரு லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.

அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 5 ஆம் தேதி ரேபிட் சோதனைகள் தொடங்கப்படும் என்று ஏப்ரல் முதல் வாரத்தில் கூறப்பட்டது. அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை 4 ஆம் தேதி ஐ.சி.அம்.ஆர் வெளியிட்டது. ஆனால் கருவிகள் இன்று வரை வந்து சேரவில்லை. தற்போது இன்னும் 3, 4 நாட்களில் ரேப்பிட் வந்து சேரும் என்று ஐ.சி.எம்.ஆர் இயக்குனர் கங்கா கேட்கர் கூறியிருக்கிறார். ஆனால் அதற்கான உறுதிகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

மார்ச் 27 ஆம் தேதி மத்திய அரசு பத்து லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை சீனாவிடம் ஆர்டர் செய்தது. ஆனால் போதிய கையிருப்பு இல்லாததால் பின்னர் அது 50 ஆயிரமாக குறைக்கப்பட்டது.

ரேபிட் டெஸ்ட் தொடங்க திட்டமிட்ட 5 ஆம் தேதியன்று கொரோனா தொற்று 3577 ஆக இருந்தது. இன்று அது எட்டாயிரத்தை தாண்டிவிட்டது. ரேபிட் சோதனை திட்டம் தாமதமடைந்து வருவதால் சமூக பரவலை கண்டறிவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நாள்முதல் நேற்றுவரை நாடுமுழுதும் 1,79,374 பேரிடம் மட்டுமே கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12 அரசு ஆய்வகங்கள் உள்பட 151 அரசு ஆய்வகங்கள் நாடு முழுதும் இயங்குகிறது. இது தவிற 68 தனியார் ஆய்வகங்களில் மட்டுமே தற்போது சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சமூக இடைவெளியை செயல் படுத்துவது மட்டுமல்லாமல் சோதனைகளையும் அதிகரித்தால் மட்டுமே கொரோனா பரவுவதை தடுத்து நிறுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மோடி அரசு நிவாரண நிதியை வெட்டி தமிழக மக்களை வஞ்சித்தது.

தற்போது ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் தமிழகத்திற்கு மீண்டும் மோடி அரசு துரோகமிழைத்துள்ளது. இதனைக் கண்டிக்காமல் முதல்வர் எடப்பாடி வாய் மூடி மெவுமனம் காக்கிறார் என அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Also Read: “ஊரடங்கு நீடிப்பதைத் தவிர்க்க முடியாது; மோடி அரசு ஏழைகளை மறந்துவிட்டது” : முதல்வருக்கு ப.சிதம்பரம் யோசனை!