India

“இந்தியா அழைத்தால் நிச்சயம் உதவுவேன்” - முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் பேச்சு! #Covid19

முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தற்போது அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மேலும், சர்வதேச நாணய நிதியத்தால் அமைக்கப்பட்ட 11 உறுப்பினர்களைக் கொண்ட வெளிப்புற ஆலோசனைக் குழுவிலும் இடம்பெற்றுள்ளார் ரகுராம் ராஜன்.

இந்நிலையில், அவ்வப்போது இந்திய பொருளாதாரம் குறித்து அவர் கருத்து தெரிவிப்பது வழக்கம். ரகுராம் ராஜன் சமீபத்தில் எழுதிய வலைப்பதிவில் பிரதமர் அலுவலகமே அனைத்தையும் செய்ய நினைப்பது பயனளிக்காது என்றும், துறை சார்ந்த நிபுணர்களை அழைக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நேர்காணலின்போது இந்திய அரசு, இப்போது உங்களை அழைத்தால் வருவீர்களா என்று கேட்டபோது, ரகுராம் ராஜன், “நேரடியாக சரி என்று கூறுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் சூழலில் பொருளாதார நிலை குறித்துப் பேசியுள்ள அவர் தெரிவித்துள்ளதாவது :

“அமெரிக்கா, இத்தாலி போன்று வைரஸ் பரவினால் நாம் இதை அதற்குரிய தீவிரத்தோடு அணுகவேண்டும். கொரோனா தொற்று பொதுச்சுகாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து உயிரிழப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது பொருளாதார நடவடிக்கைகளைத் தொடர்வது கடினம்.

உலகம் நிச்சயமாக ஒரு பெரும் பொருளாதார சீரழிவைச் சந்திக்கிறது. கொரோனா வைரஸ் மீண்டும் பரவாமல் தடுக்க நாம் எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே பொருளாதார சரிவிலிருந்து அடுத்த ஆண்டு மீள முடியுமா என்பதைக் கணிக்க இயலும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை” - சோதனைக்குத் தயாராகும் ICMR ! #Covid19