India

கொரோனா ஊரடங்கால் அதிர்ச்சியில் ஐ.டி துறை - 1.5 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்! #CoronaLockdown

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் தொழில்கள் முடங்கியுள்ளன. கொரோனா தாக்கம் காரணமாக, இந்திய ஐடி துறையில் ஒன்றரை லட்சம் பணியாளர்கள் வேலையிழக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஐடி துறையில் 45 லட்சம் பேர் பணியாற்றி வரும் நிலையில், அவர்களில் சுமார் 12 லட்சம் பேர் சிறிய ஐடி நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில், சர்வதேச அளவில் ஐடி பணிகள் முடங்கியுள்ளதால் சிறு நிறுவனங்கள் ஆட் குறைப்புக்கான நோட்டீஸ் அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால், அடுத்து வரும் 6 மாதங்களில் ஐ.டி துறையில் ஒன்றரை லட்சம் வேலையிழப்பு உருவாகும் எனத் தெரியவந்துள்ளது.

ஃபேர் போர்டல் (Fareportal) என்கிற நிறுவனம் குருகிராம் நகரத்தில் இயங்கிக் வருகிறது. இந்த நிறுவனம் தன் 500 ஊழியர்களை ராஜினாமா செய்யச் சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் ஊழியர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

பல நிறுவனங்களில் சம்பளக் குறைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊதியத்திலிருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை பிடித்துக் கொள்ளவிருப்பதாக நிறுவனங்கள் ஊழியர்களுக்குத் தெரிவித்து வருகின்றன.

சில நிறுவனங்களில், ஊழியர்களுக்கு போதுமான முன் அறிவிப்பு காலம் (Notice Period) கொடுக்காமல் வேலையை விட்டுத் தூக்கும் சூழலும் ஏற்பட்டிருக்கிறதாம். சில ஐடி நிறுவனங்கள் வெறும் 2 மணி நேரம் (120 நிமிடங்கள்) மட்டும் முன் அறிவிப்பு கால அவகாசம் (Notice Period) கொடுத்திருக்கிறார்கள்.

இதுபோன்ற சூழலைச் சமாளிக்க முடியாமல் ஊழியர்கள் பலர் மன அழுத்தத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. தனியார் நிறுவனங்களின் பணி நீக்க விவகாரத்தில் அரசு தலையிட்டு, இந்தப் பேரிடரைச் சமாளிக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Also Read: #Corona : "மரணத்தை விட நாடகம்தான் பெரிதா?” - மோடியை வறுத்தெடுக்கும் ஜிக்னேஷ் மேவானி!