India
“கொரோனா இருந்தாலும் வரிகளை ஆன்லைனில் செலுத்தலாமே?” : உச்சநீதிமன்றத்தில் மோடி அரசு இரக்கமின்றி வாதம்!
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவை தற்போது பாதிப்புள்ளாக்கி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பெரும்பாலான உலக நாடுகள் அந்நாட்டு மக்களுக்கு வரி தள்ளுபடி, மானியம் மற்றும் தொழிலாளர்களுக்கு என பலவித சலுகை அளித்து வருகின்றனர்.
ஆனால், இந்தியாவில் அதிகமான அளவில் தொழில்கள் முடங்கிய போதும் மானியம் குறித்தோ, வரி சலுகை குறித்தோ மோடி அரசு பேசவில்லை; அதேவேளையில் கேரளாவில் வர்த்தகம் முடங்கிக்கிடக்கும் நிலையில், மக்களுக்கு பல்வேறு வரி சலுகைகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவலை முன்னிட்டு மக்களுக்கு அரசு அதிகாரிகள் வரி விதிப்பது, வங்கிக் கடன் வசூலிப்பது ஆகியவற்றை ஒத்திவைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றத்தில் ஒருவர் மனு செய்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம், ஏப்ரல் 6ம் தேதி வரை வரி, வங்கிக் கடன் வசூலிப்பு கூடாது என உத்தரவிட்டது. இதனால் தொழில் இல்லாமல் தவித்து வந்த மக்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால் அதற்குள் கேரளா நீதிமன்றம் அளித்த தடை உத்தரவை நீக்கவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மோடி அரசு சார்பில் மனு செய்யப்பட்டது.
இந்த மனு நேற்றைய தினம் நீதிபதிகள் கன்வில்கர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார்.
அப்போது, “கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை அரசு அதிகாரிகள் உணர்ந்துள்ளனர். மக்கள் பிரச்னைகளை சந்திக்காத வகையில் நாங்கள் முறையான வழிமுறைகளை உருவாக்கி வருகிறோம். ஜி.எஸ்.டி உட்பட பலவித வரிகளை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
இதனால், உயர்நீதிமன்றம் இதுபோன்ற உத்தரவை பிறப்பிக்க கூடாது. கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நபர் பதில் அளிக்கவும் நோட்டீஸ் அனுப்பியது.
கொரோனா அச்சுறுத்தல் நிலவி வரும் சூழலில் நீதிமன்ற உத்தரவும், மோடி அரசின் நடவடிக்கையும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!