India
“டீ பார்ட்டி போல கோமுத்ரா பார்ட்டி” : கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கோமியம் வழங்க முடிவெடுத்த இந்து மகாசபை !
சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 3000த்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 80,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது.
பெரும்பாலான உலக நாடுகள் கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி பெருகி வரும் இந்தச் சூழலில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்துவருகின்றன. ஆனால், இந்தியாவில் சில கும்பல்கள் கொரோனா வைரஸை பயன்படுத்திக் கல்லாகட்டும் முயற்சிகளில் “இந்த மூலிகை சாப்பிட்டால் கொரோனா வராது”, “இதைச் செய்தால் கொரோனா பரவாது” என்பதுபோன்ற வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, ஆளும் கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலர் கொரோனாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் பிற்போக்கு கருத்துகளை மக்கள் மத்தியில் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தர பிரதேசத்தின் முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத், “ஒருவர் யோகா செய்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் அவர்கள் கொரோனா வைரஸ் உள்ளிட்ட தாக்குதலுக்கு பயப்படவேண்டாம்” எனப் பேசினார்.
அவரைத் தொடர்ந்து அசாம் மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ, “பசுவின் சாணத்தையும், கோமியத்தையும் பயன்படுத்தி கொரோனா வைரஸை குணப்படுத்த முடியும். கொரோனா வைரஸ் காற்றில் பரவுவதால் அதை பசுவின் சிறுநீரைத் தெளிப்பதன் மூலம் தடுக்க முடியும்” எனப் பேசி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
சட்டமன்றத்தில் பிற்போக்குத்தனமான கருத்தைத் தெரிவித்த பா.ஜ.க எம்.எல்.ஏ-விற்கும், முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கும் பலரும் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், Tea Party அதாவது தேநீர் விருந்து நடத்துவது போல ‘கோமிய விருந்து' (Gaumutra Party) நடத்தப்போவதாக இந்து மகாசபை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து மகாசபா தலைவர் சக்ரபாணி மகாராஜ், “கொரோனாவை கட்டுப்படுத்த தேனீர் விருந்து போல ‘கோமிய விருந்து’ நடத்த இருக்கிறேன். அந்த விருந்தில் கலந்துகொள்பவர்களுக்கு கொரோனா எப்படி பரவுகிறது என எடுத்துச் சொல்லப்படும்.
அதுமட்டுமின்றி, கோமியம், பால் சார்ந்த பொருட்கள் மற்றும் மாட்டுச்சாணம் ஆகியவை விற்கப்படும். இந்த நிகழ்ச்சியில் கவுன்ட்டர்கள் அமைத்து கோமியம் விநியோகிக்கப்படும். பிற விலங்குகளை கொன்று சாப்பிடுபவர்களுக்குத்தான் வைரஸ் பாதிப்பு ஏற்படும். சைவம் சாப்பிடுபவர்களுக்குக் கவலையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இந்து மகாசபை தலைவரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!