India

இருமல் டானிக் குடித்ததால் உயிரிழப்பு : விஷத்தன்மை கொண்ட மருந்து தமிழகத்தில் விற்பனை? - அதிர்ச்சி தகவல்!

இருமல் மருந்து குடித்த 9 சிறுவர்கள் ஜம்முவில் உயிரிழந்தையடுத்து, மருந்தில் விஷத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டு மருந்து உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்திலும் இந்த இருமல் மருந்து விற்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் டிஜிட்டல் விஷன் நிறுவனம் Coldbest - PC Syrup என்கிற பெயரில் இருமல் மருந்தை தயாரித்து வந்துள்ளது. இந்த மருந்தைக் குடித்த ஒன்பது சிறுவர்கள் ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் கடந்த மாதம் 17ஆம் தேதி உரியிழந்துள்ளனர். மேலும் 17 சிறுவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து அந்த இருமல் மருந்தை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தியதில் Diethylene Glycol என்கிற விஷத்தன்மை உள்ள வேதிப்பொருள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுதான் உயிரிழப்புக்குக் காரணம் என்பதையும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

தற்போது இந்த மருந்து உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக இமாச்சலப் பிரதேச மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி நவனீத் மார்வா கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீர், உத்தர பிரதேசம், ஹரியானா, தமிழ்நாடு உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் இந்த மருந்து விற்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் இந்த இருமல் மருந்து விற்கப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்ட இந்த மருந்தின் 5,500 யூனிட் மருந்து இன்னும் திரும்பப் பெறப்பட வேண்டியுள்ளது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விஷத்தன்மை கொண்ட இருமல் மருந்து தமிழகத்தில் விற்கப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு இருமல் மருந்து வாங்கும்போதும், விற்கும்போதும் கவனமாக இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Also Read: “பயிர்க்கடன் காப்பீட்டு திட்டத்தில் திருத்தம் : விளைவுகள் மிகமோசமாக இருக்கும்” - ப.சிதம்பரம் எச்சரிக்கை!