India
“மோடி அரசின் ஓரவஞ்சனையால் ரூ.4 லட்சம் கோடி கடன்சுமையில் தத்தளிக்கிறது தமிழகம்” - கே.பாலகிருஷ்ணம் ஆவேசம்!
தமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “மாநிலங்களில் வருவாய்க்கான வாய்ப்புகள் அனைத்தையும் மத்திய அரசு கொஞ்சம் கொஞ்சமாக கபளீகரம் செய்துள்ள நிலையில் பல மாநிலங்கள் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. தமிழக அரசும் ஏறத்தாழ 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன்சுமையால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய பல்வேறு நிதிவகைகளை தராமல் வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யில் தமிழகத்தின் பங்கான ரூ. 4,073 கோடி, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உயர்கல்வி உதவிக்கான மத்திய அரசின் பங்குத் தொகை பலநூறுகோடி, மாநிலத்தில் செய்து முடிக்கப்பட்ட கிராமப்புற வேலை உறுதித் திட்டத்திற்கான நிதி பலநூறு கோடிகளை மத்திய அரசு இதுகாறும் அளிக்காமல் காலம்தாழ்த்தி தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது.
இதேபோன்று மாநிலங்களின் பங்காக இதுவரை வரிவருவாயில் மாநிலங்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்த 42 சதவிகிதம், 41 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுவெல்லாம் தமிழக அரசை மேலும் கடுமையான நிதிச்சுமையில் தள்ளுவதோடு, ஒட்டுமொத்த சுமையையும் தமிழக மக்கள் மீது திணிப்பதாகும்.
இந்த பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.10,000 மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அடிக்கல் நாட்டு விழா மேற்கொள்ளப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்படாமலே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதுவெல்லாம் மத்திய அரசு தமிழக மக்களை ஓரவஞ்சனையோடு நடத்துவதையே காட்டுகிறது. மத்திய அரசின் இந்த மாற்றாந்தாய் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்திற்கான நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும், தமிழகத் திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய முன்வர வேண்டும்.
கடுமையான நெருக்கடி இருந்த போதும் மத்திய அரசு மாநிலத்திற்கு உரிய நிதிப்பங்கை அளிக்காதபோதும் மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க அரசாங்கம் இதுகுறித்து மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தவோ, விமர்சிக்கவோ செய்யவில்லை.
தனது சுயநலத்திற்காக தமிழக மக்கள் வஞ்சிக்கப்பட்டாலும் அமைதி காக்கும் மாநில அரசை வன்மையாக கண்டிக்கிறோம். எனவே, தமிழக அரசும் மத்திய அரசு தர வேண்டிய நிதிகளை பெறுவதற்கு உரிய அழுத்தங்களை அளிக்கவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!