India

“மதச்சார்பின்மையே எங்கள் நம்பிக்கை; அதை களங்கப்படுத்த அனுமதியோம்” : மோடிக்கு பினராயி விஜயன் பதிலடி!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர்ச்சியான போராட்டத்தை கேரளா அரசே முன்னெடுத்து வருகிறது. இந்த சூழலில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மனத்தின் மீது பிரதமர் மோடி பேசினார்.

அப்போது பேசிய அவர், “ குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரளாவில் நடைபெறும் போராட்டத்தில் தீவிரவாத சக்திகள் ஊடுருவியுள்ளதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகிறார். அதேசமயத்தில் டெல்லியில் நடைபெற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அவரது கட்சி ஆதரவு தெரிப்பதாகவும்.” மோடி விமர்சித்திருந்தார். மேலும் சிஏஏ போராட்டத்தை எதிர்கட்சிகள் தூண்டிவிடுவதாகவும், இதில் இரட்டைவேடம் போடுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக பினராயி விஜயன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கேரளம்தான் முன்னிலையில் உள்ளது. அரசியல் அமைப்பின் சட்ட மாண்புகளை சீர்குலைக்கும் சிஏஏ சட்டத்திற்கும், மதவாத பிளவுவாத கொள்கை கொண்டவர்களுக்கு எதிரான போராட்டத்தையும் கேரளா ஒருபோதும் நிறுத்திக் கொள்ளப் போவதில்லை.

சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தில் ஊடுருவலகள் தொடர்பாக மக்களை எச்சரித்திருக்கிறோம். அதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், எக்காரணம் கொண்டும் சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தை கேரளம் கைவிடாது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரளாவில் நடைபெறும் போராட்டம் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாகும். மதத் தலைவர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இதில் இணைந்துள்ளனர்.

இதன் மூலம் கேரள மக்கள் மத மற்றும் சாதிகளை மீறி ஒரு பொதுவான முன்னணியை உருவாக்கியுள்ளனர். அதனால்தான் சிஏஏ எதிர்ப்பில் கேரளா நாட்டுக்கே முன்னுதாரணமாக விளங்குகிறது.

அதுமட்டுமின்றி, மதவாத நோக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உத்தரவால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் வலிமை கேரளத்துக்கு உண்டு. குடியுரிமை சட்டத்திற்கு எதிரான சில போராட்டக்கங்களில் சில அமைப்புகளுக்கு தீவிரவாத அமைப்புகளின் தொடர்பு இருப்பதாக நான் கூறினேன்.

அதுபோல எந்த அமைப்பாக இருந்தாளும் ஏன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பாக இருந்தாலும் எங்களது போராட்டத்தைக் களங்கப்படுத்த அனுமதிக்கமாட்டோம்.

Also Read: CAA-வுக்கு எதிராக சண்டை செய்யும் கேரளா : 70 லட்சம் பேர் பங்கேற்ற பிரம்மாண்ட மனிதச் சங்கிலி போராட்டம்

ஆர்.எஸ்.எஸ்ஸின் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலைத் தோற்கடிப்பதற்கான ஒரே வழி மதச்சார்பின்மைதான் என்ற நம்பிக்கையால் கேரளா வழிநடத்தப்படுகிறது. எனது கருத்தைச் சுட்டிக்காட்டி பேசிய பிரதமர் பேசியது தவறானது; அவரது விமர்சனம் கண்டனத்துக்குரியது. தனது கருத்தை பிரதமர் திருத்திக்கொண்டு திரும்ப பெறவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: “ஜனநாயகத்தைப் பாதுகாக்க தயாராவோம்” : CAA-வுக்கு எதிராக 11 மாநில முதல்வர்களுக்கு பினராயி விஜயன் அழைப்பு!