India
“#CAAவுக்கு ஆதரவாக செயல்படும் ஆளுநரை நுழையவிடமாட்டோம்” : கேரள எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் போராட்டம்!
மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை கேரள அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. குறிப்பாக நாட்டிலேயே முதன்முதலாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனையடுத்து குடியுரிமை சட்டம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி உச்சநீதிமன்றத்திலும் மாநில அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. மாநில அரசின் தொடர் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், மாநில அரசு தனக்குத் தெரியாமல் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இதுதொடர்பாக மாநில அரசிடமும் அறிக்கை கோரியிருந்த ஆளுநர், சட்டசபையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு மாநில அரசு எதிர்ப்புத் தெரிவிப்பது தொடர்பான வாசகத்தைப் படிக்கமாட்டேன் எனவும் கூறியிருந்தார்.
இதனால் கேரள எம்.எல்.ஏ-க்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த பரபரப்பான அரசியல் சூழலில் கேரள சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையாற்ற கேரள சட்டப்பேரவைக்கு வந்தார். அப்போது ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்றும், அவர் சட்டசபையில் இருந்து திரும்பிப் போக வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். மேலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பதாகைகளை ஏந்தியும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் ஆளுநர் தனது உரையைத் தொடங்கியபோது ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்து எதிர்ப்பு முழக்கமிட்டு, ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!