India

”CAA பாகுபாடுமிக்கது : மக்களின் போராட்டங்களை உன்னிப்பாக கவனிக்கிறோம்” : அமெரிக்க செயலர் எச்சரிக்கை!

ஜம்மு காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் இருப்பதையும், நாட்டில் நடக்கும் CAA-வுக்கு எதிரான போராட்டங்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் முதன்மை துணை உதவி செயலாளர், ஆலிஸ் வெல்ஸ் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பா.ஜ.க அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை தொடர்ந்து அங்கு மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

காஷ்மீர் மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக பா.ஜ.க-வினர் பேசி வந்தாலும், காஷ்மீர் இன்னும் இராணுவ கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. பல மாதங்கள் கடந்து இப்போதுதான் பல பகுதிகளுக்கு தொலைபேசி, இணைய சேவை இணைப்புகள் திரும்பக் கிடைத்துள்ளன.

இந்த நிலையில் இதுகுறித்தும், CAA குறித்தும் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் முதன்மை துணை உதவி செயலாளர், ஆலிஸ் வெல்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “காஷ்மீரில் இப்போதுதான் சில மாற்றங்கள் நடந்து வருகின்றன. அங்கு குறைந்தபட்சம் சில அலுவலகங்களில் இணையம் வழங்கப்பட்டு இருக்கிறது. வெளிநாட்டு தூதர்கள், அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட அனுமதி பெற்றுள்ளனர்.

காஷ்மீரில் வெளிநாட்டு அதிகாரிகள் சென்று அவ்வப்போது ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அதேபோல் அங்கு கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும். அவர்கள் பல நாட்களாக வீட்டு காவலில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் வெளியே விடுவதோடு, அவர்கள் மக்களிடம் பேசவும் அனுமதிக்கப்பட வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்துப் பேசியுள்ள அவர், “இந்தியாவில் கொண்டு வரப்பட்டிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் பாகுபாடு பார்க்கிறது. இஸ்லாமியர்களை மட்டும் விலக்கிவிட்டு இப்படி சட்டம் கொண்டுவருவது மிகவும் தவறானது.

CAA இந்திய அரசியலமைப்புs சட்டத்திற்கு எதிரானது. இந்தியாவில் நடக்கும் போராட்டங்களை அமெரிக்கா கவனித்து வருகிறது. CAA சட்டம் தொடர்பாக நடந்து வரும் மாற்றங்களை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மக்கள் இதற்கு எதிராக தெருவில் இறங்கி போராடுவது எங்களுக்கு தெரியும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “தனிநபர் கருத்து சுதந்திரத்தை காக்க வேண்டியது அரசின் கடமை” - காஷ்மீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் ஆணை!