India

NPR முறையில் கேட்கப்படவுள்ள விவரங்கள்? - வெளியானது புதிய தகவல்!

இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயாரிப்பதற்காக மத்திய பா.ஜ.க அரசு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டை கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு கேரளா, மேற்கு வங்க மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

மேலும், தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பான பணிகளை மேற்கொள்ளக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டும் வருகின்றனர். இந்நிலையில், தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு தேவைப்படும் ஆவணங்கள் தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளதாக தகவல் எழுந்துள்ளது.

அதில், தாய், தந்தை பெயர், இதற்கு முன்பு வசித்திருந்த இடம், வாக்காளர் அட்டை, பிறப்பு சான்றிதழ், பிறந்த இடம், படிப்பு சான்றிதழ், திருமண விவரங்கள், ஓட்டுநர் உரிமம், தொலைப்பேசி எண் என மொத்தமாக என்.பி.ஆரில் 21 தகவல்கள் கேட்கப்படவுள்ளன. ஆனால் ஆதார் விவரங்களை தேவைப்பட்டால் மட்டும் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற ஏப்ரல் - செப்டம்பர் வரையும், 2021 பிப்ரவரி 9 முதல் 28ம் தேதி வரை என இந்த என்.பி.ஆர் பணி இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய என்.பி.ஆர் முறையில் தாய் மொழியில் தகவல்கள் கேட்டுப்பெறப்பட உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக 2010 மற்றும் 2015ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது 14 தகவல்கள் மட்டுமே கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.