India
அம்பேத்கர் படிப்பகம் அமைத்த இளைஞர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி தாக்கிய கும்பல் - தஞ்சையில் கொடூரம்!
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே குறிச்சிமலை பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அரசு புறம்போக்கு இடத்தில் அம்பேத்கர் படிப்பகம் என்ற பெயரில் அங்குள்ள மாணவர்கள் மத்தியில் கல்வியை மேம்படுத்துவதற்காக குடிசை ஒன்றை அமைத்துள்ளனர்.
அந்தக் குடிசைக்கு அருகில் அதே பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தைச் சுற்றியும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முகமது அலியின் நிலத்திற்கு பவர் ஏஜென்டாக பாபு என்ற ரத்தினவேல் பாண்டியன் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், பாபு கடந்தவாரம் அம்பேத்கர் படிப்பகம் அமைப்பதை எதிர்த்து, தங்கள் நிலத்திற்கு வரும் வழியை மறைத்துள்ளதாகக் குற்றம்சாட்டி, குடிசையை அப்புறப்படுத்துமாறு கூறிவந்தாகக் கூறப்படுகிறது. மேலும், தனது ஆட்களை அனுப்பி அந்த குடிசையை வீடியோ எடுக்கவும் சொல்லியுள்ளார்.
ஆனால் வீடியோ எடுக்க அனுமதிக்காத பார்த்திபன் மற்றும் சுரேஷ் இருவரும் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரத்தில் இருந்துள்ளார் பாபு.
கடந்த 8ம் தேதி மாலை தங்கள் பணியை முடித்துக்கொண்டு பார்த்திபனும் சுரேஷும் திருமங்கலக்குடி - திருப்பனந்தாள் சாலை இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது இவர்களை மிரட்டுவதற்காக காத்திருந்த பாபுவும் அவரது நண்பர் மணியும் அவர்களின் வாகனத்தை வழிமறித்து தாக்க முற்பட்டுள்ளனர்.
ஒருகட்டத்தில் தான் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மிரட்டத் தொடங்கியுள்ளார் பாபு. பார்த்திபனையும், சுரேஷையும் மண்டியிட வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்தையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருவிடைமருதுார் காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பாபு மீது நிலத் தகராறு பிரச்னையில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இதுவரை போலிஸாரை பாபுவைக் கைது செய்யவில்லை எனவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
Also Read
-
“கிண்டியில ஒருத்தர் நமக்காக பிரச்சாரத்தை தொடங்கிட்டாரு..” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகல!
-
ஜி.டி.நாயுடு பாலம் : மோடிக்கு நன்றியா? - போலி பிரசாரம் செய்யும் பாஜக... அம்பலப்படுத்திய TN Fact Check!
-
“தமிழ்நாடு இரத்ததானத்தில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது!” : தேசிய இரத்த தான நாளில் அமைச்சர் மா.சு பேச்சு!
-
“10,000 கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் உரையாடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” : ககன்தீப் சிங் தகவல்!
-
நமக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!