India

“CAAவுக்கு பயன்படும் மக்கட்தொகை கணக்கெடுப்பை கேரளாவில் நடத்தப்போவதில்லை” : கேரள அரசு அதிரடி அறிவிப்பு!

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் 9வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக சென்னை, கேரளா, புதுச்சேரி, பெங்களூரு, லக்னோ, ஐதராபாத், மும்பை உத்தர பிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட இடங்களில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

மேலும் மத்திய பா.ஜ.க அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கேரளாவிலும் போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தை ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து முன்னெடுத்தன.

மேலும் மாநிலம் முழுவதும் மக்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்த அனுமதியையும் கேரள அரசு வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, கேரளாவில் இந்த சட்டத் திருத்தத்தை அமல்படுத்த விடமாட்டோம் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மத்திய அரசு தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடுத்தாண்டு நடத்த திட்டமிட்டுள்ளது. குடியுரிமைச் சட்டத்திற்காக புதிய மக்கட்தொகை கணக்கெடுப்பு பயன்படுத்தப்படும் என தகவல் பரவியது. இதனால் தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை தற்போது கைவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

அதன் அடிப்படையில் தற்போது, ”தேசிய மக்கட்தொகை கணக்கெடுப்பை கேரளாவில் நடத்தப்போவதில்லை” என்று கேளர அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2021 மக்கட்தொகை கணக்கெடுப்பை நடத்தப்போவதில்லை என கேரள அரசு முடிவெடுத்துள்ளதாக முதன்மைச் செயலர் ஜோதிலால் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதுவரை நடைபெற்று வந்த தேசிய மக்கட்தொகை கணக்கெடுப்பிற்கு முழு ஒத்துழைப்பை கேரள அரசு வழங்கியுள்ளது. அதேபோல் 2021ம் ஆண்டு நடைபெறவிருக்கும் கணக்கெடுப்பிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார்.

ஆனால், இந்த மக்கட்தொகை கணக்கெடுப்பு குடியுரிமை சட்டத்தின் பதிவேட்டிற்கு பயன்படுத்தப்படும் என தகவல் கிடைத்தது. எனவே மத்திய அரசின் தேசிய மக்கட்தொகைப் பட்டியலைப் புதுப்பிக்கும் நடவடிக்கையில் கேரள அரசு ஒருபோதும் உதவி செய்யாது.

அதனால் மக்கட்தொகை கணக்கெடுப்பிற்கான நடவடிக்கைகளை மாநில அரசு நிறுத்திவைக்கிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கட்தொகை கணக்கெடுப்பை நடத்தப்போவதில்லை என கேரள அரசு எடுத்துள்ள முடிவுக்கு பொதுமக்கள் பலர் ஆதரவு அளித்துள்ளனர்.

Also Read: “அரசியல் சாசனத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டது கேரள அரசு; ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு அல்ல” - கேரள முதல்வர் பேச்சு!