India

இனி விவசாய நகைக்கடனுக்கு மானிய வட்டி கிடையாது - மத்திய அரசின் அறிவிப்பால் விவசாயிகள் கலக்கம்!

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள், நகைக்கடன் பெறுவதற்கு 11 சதவிகிதமாக இருந்த வட்டியில் 4 சதவிகிதத்தை மானியமாக குறைத்து 7% வட்டியுடன் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், இந்த மானிய திட்டத்தில் விவசாயிகள் அல்லாதவர்களும் நகைக்கடன் பெறுகின்றனர் என மத்திய அரசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால், நகைக்கடனுக்கான மானிய வட்டியை ரத்து செய்ய கடந்த செப்டம்பர் மாதமே திட்டமிட்ட மத்திய வேளாண் அமைச்சகம் தற்போது அதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், 7% வட்டியில் விவசாயிகளுக்கு நகைக்கடன் வழங்கக்கூடாது என அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், 3 லட்சம் வரையிலான நகைக்கடனுக்கு 9.25 சதவிகிதமும், அதற்கு மேலான கடனுக்கு 9.50 முதல் 11 சதவிகிதம் வரை வட்டி விதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், அக்டோபர் 1ம் தேதி முதல் வழங்கப்பட்ட விவசாய நகைக்கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிற ஏப்ரல் 1ம் தேதிக்குள் வசூலிக்கவும் மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.

வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் கடனும் ரத்து செய்யப்படுமா என அச்சத்தில் உள்ளனர்.