India

“மூன்று மாதங்களுக்கும் மேலாக மீளமுடியாமல் தவிக்கும் ஆட்டோமொபைல்” - மோடி ஆட்சியின் சாதனை இதுதானா?

இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முற்றிலும் சிதைந்துள்ளது. பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால், கார் உள்ளிட்ட மோட்டார் வாகன விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளது.

இதனால், அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, கடந்த நவம்பர் மாதத்தில் ஆட்டோமொபைல் துறை 12% சரிவைச் சந்தித்துள்ளது என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் (சியாம் - SIAM - Society of Indian Automobile Manufacturers) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சியாம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த நவம்பர் மாதத்தில் 2,90,727 பயணிகள் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டது. அதில், மொத்தமாக 2,63,773 பயணிகள் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

மேலும் அதில், கார் விற்பனை 10.8% சரிந்து 1,60,306 ஆகக் குறைந்துள்ளது. முந்தைய ஆண்டில் இது 1,79,783 ஆக இருந்தது. அதேபோல், மோட்டார் சைக்கிள் விற்பனை 14.87 % சரிந்து 8,93,538 ஆகக் குறைந்துள்ளது. முந்தைய ஆண்டு இது 10,49,651 ஆக இருந்தது.

வணிகப் பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை 14.98 சதவீதம் சரிந்து 61,907 மட்டுமே விற்பனையாகியுள்ளது என SIAM தெரிவித்துள்ளது.

மேலும், அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து ஒட்டுமொத்த வாகன விற்பனை 12 சதவீதம் சரிந்து வெறும் 17,92,415 ஆகவும் உள்ளது. இது கடந்த 2018-ம் ஆண்டில் 20,38,007 ஆக இருந்தது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஆட்டோமொபைல் துறையில் விற்பனை சரிவால் பல லட்சம் பேரின் வேலை பறிபோய்விட்டது. அதோடு, உற்பத்தியைக் குறைக்க உற்பத்தி நிறுவனங்கள் தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றன. இந்தநிலையில், வாகன விற்பனை சரிந்துள்ளது விற்பனையாளர்கள், டீலர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கடும் வீழ்ச்சியில் ஆட்டோமொபைல் துறை : கண்டுகொள்ளாத மோடி அரசு - 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் !