India

“9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தக்கூடாது” - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் அ.தி.மு.க அரசும், மாநில தேர்தல் ஆணையமும் தொடர்ந்து சுணக்கம் காட்டி வருகின்றன. இந்நிலையில் கடந்த 2ம் தேதி, ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு மட்டுமே மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது.

நிர்வாக காரணங்களுக்காக மேயர் உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு இப்போது தேர்தல் நடத்தப்படவில்லை என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி விளக்கம் அளித்தார். இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, ‘இடஒதுக்கீடு’ முறையை முறையாக பின்பற்றவேண்டும்; புதிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்யவேண்டும்; அதன்பின்னரே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்புடைய வழக்குகள் மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. மறுவரையறை முடியாமல் தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டது ஏன் என்றும், சட்ட நடைமுறைகளை கடைபிடிக்காதது ஏன் என்றும் தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினார் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே.

நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என உத்தரவிட்டுள்ளனர்.

நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மேலும், 9 மாவட்டங்களில், வார்டு மறுவரையறை முடியாத காரணத்தினால், அங்கு தேர்தல் நடத்த தடை விதிக்கப்படுகிறது. அங்கு 4 மாதங்களில் தொகுதி மறுவரையறையை முடித்து தேர்தல் நடத்தவேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த சூழலில் உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக ஆய்வு செய்த பிறகு உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனுக்கள் பெறுவது தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Also Read: “உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என சதி செய்கிறது அ.தி.மு.க அரசு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!