India

‘இனியாரும் பேசக்கூடாது’ ; சேட்டை செய்த மாணவர்களை நாற்காலியில் கட்டிவைத்த கொடூர தலைமை ஆசிரியர்!

ஆந்திர மாநிலம் அனந்தபுரமு மாவட்டத்தில் உள்ள காதிரி என்ற பகுதியில் அரசு நகராட்சி தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகிறார்கள்.

இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் ஸ்ரீதேவி என்பவர் மீது ஏற்கனவே மாணவர்களை அடித்தல் மற்றும் தகாத வார்த்தைகளில் திட்டுதல் போன்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் பள்ளி தொடங்கியதும் பள்ளி வளாகத்தில் பார்வையிடுவதற்காக ஸ்ரீதேவி சென்றுள்ளார். அப்போது அந்த பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஆசிரியர் பேச்சைக் கேட்பதில்லை என்றும், அதிக சேட்டை செய்வதாக வகுப்பு ஆசிரியர் கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர் ”இனி யாரும் பேசக்கூடாது, மீறி பேசினால் இதுதான் நிலைமை” என பள்ளியில் புத்தக்கம் கட்டிவைக்க பயன்படுத்தும் சவுக்கு கயிற்றை எடுத்து மாணவனின் கை கால்களை ஒன்றாக சேர்த்து மேசையின் மற்றோரு கால்களுடன் கட்டியுள்ளார். சிறிது நேரம் ஆனதும் மாணவர் வலியால் அழுது தவித்துள்ளார்.

அதேப்போல் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் இரண்டு மாணவர்கள், வகுப்பில் அதிக சேட்டை செய்ததாகக் கூறி அவர்களையும் ஆசிரியர்கள் கயிற்றால் கட்டி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தின் போது பள்ளிக்குச் சென்ற பொற்றோர் ஒருவர் இதனைப் புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படத்தைப் பார்த்த சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் இதுகுறித்து பள்ளி வகுப்பு ஆசிரியரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். தலைமை ஆசிரியை ஸ்ரீதேவி உத்தரவின் பெயரில் தான் இதுபோல் செய்ததாக ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இந்த செய்தி வெளியானதும் அனந்தபுரமு மாவட்ட ஆட்சியர் உடனே, தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், குழந்தைகள் நல ஆணையத்திற்கும் புகார் செல்ல, மாவட்ட ஆட்சியருக்கு ஸ்ரீதேவி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.