India

மகாராஷ்டிர அரசியல் நிகழ்வு - ஜனநாயகப் படுகொலை : எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் இரு அவைகளும் ஒத்திவைப்பு!

மகாராஷ்டிரா விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

மகாராஷ்டிர அரசியலில் பல்வேறு குழப்பங்களுக்கிடையே பா.ஜ.க-வின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் திடீரென பதவியேற்றனர். மகாராஷ்டிராவில் பா.ஜ.க ஆட்சி அமைத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா-தேசியவாத காங்.-காங்கிரஸ் கட்சிகள் தாக்கல் செய்துள்ளமனுக்கள் மீது 2வது நாளாக இன்று விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநில அரசியல் விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதால் கடும் அமளி ஏற்பட்டது. இதனையடுத்து மக்களவை பகல் 12 மணி வரையிலும், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவையில், மகாராஷ்டிரா விவகாரம் தொடர்பான விவாதத்தின்போது பேசிய ராகுல் காந்தி, “மகாராஷ்டிராவில் நடந்திருப்பது ஜனநாயகப் படுகொலை. இது பற்றி மத்திய அரசை கேள்வி கேட்க நினைக்கிறேன். ஆனால் எப்படி இருந்தாலும் அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ளப் போவதில்லை” என்றார்.

இதற்கிடையே, மகாராஷ்டிர மாநில அரசியல் விவகாரம் தொடர்பாக பா.ஜ.கவுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின்போது, மகாராஷ்டிராவில் பா.ஜ.க ஆட்சி அமைத்ததற்கு எதிராக எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்களும் கலந்துகொண்டனர்.