India
குடிப்பழக்கத்தை கண்டித்த மனைவியைக் கொன்று தலையுடன் சரணடைந்த கணவர் : போலிஸிடம் அளித்த பகீர் வாக்குமூலம்!
உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் நாள்தோறும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. அதனைத் தடுக்கும் வகையில் அம்மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்வரவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், ஆக்ரா அருகே கச்புரா என்ற பகுதியில் கட்டிய மனைவியை வெட்டிக்கொன்று அவரது தலையை 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஊர்வலமாக கணவர் எடுத்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கச்புரா பகுதியைச் சேர்ந்த நரேஷ் பாகெல் என்ற நபர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். இவருக்கும், சாந்தி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகியுள்ளன. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
கணவரின் குடிப்பழக்கத்தை கண்டித்து அவரது மனைவி சாந்தி அவ்வப்போது சண்டையிடுவது வழக்கமாக இருந்துள்ளது. அதேபோல், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவும் நரேஷ் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததையடுத்து தட்டிக்கேட்டுள்ளார் சாந்தி.
இதனால், ஆத்திரமடைந்த நரேஷ் பாகெல், போதையில் கத்தியை எடுத்து தனது மனைவியின் கழுத்தில் வெட்டியதில் தலை தனியாக உடல் தனியாக கீழே விழுந்தார் சாந்தி. அதன் பிறகு சாந்தியின் உடலை ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு தலையை ஒரு பையில் போட்டு 5 கி.மீ தொலைவுக்கு ஊர்வலமாக கொண்டு சென்றுள்ளார் நரேஷ்.
இதற்கிடையில் தனது அம்மாவைக் காணவில்லை என தேடிய முதல் பெண் பூட்டிய அறைக்குள் சாந்தியின் உடல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் போலிஸிடம் தகவலளிக்க நரேஷை போலிஸாரும் தேடி வந்தனர்.
இந்த நிலையில், சாந்தியின் தலை வைக்கப்பட்ட பையுடன் காவல்நிலையத்துக்கு வந்த நரேஷ் பாகல் போலிஸாரிடம் சரணடைந்தார். அதன் பிறகான விசாரணையில், சம்பவம் நடந்த அன்று தான் குடிக்கவில்லை என்றும், தனது மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருந்ததாகவும் அதனாலேயே கொலை செய்ததாகவும் போலிஸாரிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி... விண்ணப்பிப்பது எப்படி?
-
3 நாட்களுக்கு AI & Digital Marketing பயிற்சி... தமிழ்நாடு அரசின் அறிவிப்பின் விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டில் சுயமரியாதையை நிலைநாட்டும் ஆண்டாக 2026 மலரட்டும்!” : துணை முதலமைச்சர் வாழ்த்து!
-
புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட CM MK Stalin: மிகை ஊதியம்,பொங்கல் பரிசு!
-
“2025 ஆம் ஆண்டு முடிவுற்று... 2026 ஆம் ஆண்டு பிறக்கிறது!” : முரசொலி தலையங்கம்!