India

"கடன் மதிப்பீட்டில் ஆபத்தான இடத்தில் இந்தியா" பொருளாதார நிலை மோசமடையும் : எச்சரிக்கும் ஆய்வு நிறுவனம்!

சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் ( Moody's), இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை அவ்வபோது வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதம் என கூறியிருந்தது. பின்னர் கடந்த அக்டோபருக்கு முந்தைய கணிப்பிலிருந்து இந்த மதிப்பு 5.8 சதவிகிதத்திற்கு குறைந்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியா கடன் மதிப்பீட்டில் பின் நோக்கி நகர்ந்திருப்பதாக அறிவித்துள்ளது அந்நிறுவனம். இதுதொடர்பாக மூடிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “கடன் மதிப்பீட்டில் ,‘நிலையான அமைப்பு’ முறையில் இருந்து ‘எதிர்மறையான’ நிலைக்கு இந்தியா சென்றுள்ளது, இதனால் முதலிடு குறையும்” என தெரிவித்துள்ளது.

குறிப்பாக, “நாட்டில் இருக்கும் கடன் மதிப்பீட்டைக் கொண்டுதான் முதலீடுகள் குவியும். மதிப்பீடு நம்பிக்கை அளிக்கவில்லை என்றால் முதலீடு செய்ய அந்நிய முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டுவார்கள்” என எச்சரித்துள்ளது.

மேலும், “இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்தை நிலையால் தொழில் துறை திண்டாடுகிறது. ஏற்கனவே தேக்கநிலையில் உள்ள பொருளாதார வளர்ச்சி மேலும் சீர்குலையும். வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் கடும் அழுத்தத்தை சந்திக்கும். கடன் வழங்குவதிலும் பாதிப்பு ஏற்படும். வேலையின்மை அதிகரிக்கும்.” என குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக இந்திய நிதித்துதுறை சில அபாயங்களை சந்திக்கும் என எஸ் அண்ட் பி குளோபல் மதிப்பீடுகள் (S&P Global Ratings) நிறுவனம் எச்சரித்த சில நாட்களிலேயே மூடிஸ் நிறுவனம் எச்சரித்திருப்பது இந்தியாவுக்கு கவலைக்குரிய செய்தியே.

பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க முயற்சி எடுப்பதாக கூறிவரும் வேளையில், முதலீட்டுத் தகுதிக்கான தரநிலையில், இரண்டாவது மிக மோசமான தரநிலைப் புள்ளியான Baa2 இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அக்டோபர் மாதத்தில் பொருளாதாரம் 8.8% ஆக சரிந்தது. இது இரண்டு ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாகும் என்று ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.