India

கடந்த 4 ஆண்டுகளில், நாளொன்றுக்கு 8 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க ஆளும் மகாராஷ்ட்ராவின் அவலம் !

மகாராஷ்ட்ரா மாநில சட்டசபைத் தேர்தலையொட்டி அக்டோபர் 21ம் தேதி வாக்குபதிவு நடைபெறவுள்ளது. இதனிடையே அரசியல் கட்சிகளிடையே மகாராஷ்ட்ரா மாநிலத்தை யார் கைப்பற்றுவது என்கிற போட்டி மிகத் தீவிரமடைந்துள்ளது.

திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், இறுதி கட்டப் பிரசாரம் மாநிலம் முழுவதும் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ.க தலைவர்கள், மக்கள் நம்பிக்கையைப் பெறுவதற்காக ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதி சாவர்க்கருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளனர்.

கடந்த ஆட்சியில், மகாராஷ்ட்ராவை சிவசேனா மற்றும் பா.ஜ.க கூட்டணியே ஆட்சியைக் கைப்பற்றியது. விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்க்கப்படாததால், விவசாய தற்கொலை எண்ணிக்கையும் அதிகரித்தது. நாட்டிலேயே அதிக தற்கொலை நடைபெற்ற மாநிலங்களில் மகாராஷ்ட்ராதான் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளது.

மகாராஷ்ட்ராவில் பாஜக-சிவசேனா ஆட்சியின் கடந்த நான்கு ஆண்டுகளில், தினமும் குறைந்தது எட்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் வெளியாகியுள்ளது. சமூக ஆர்வலர் ஷகீல் அகமது என்பவர் கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற விவசாய தற்கொலை எண்ணிக்கை எவ்வளவு எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்த பதிலை அரசு அளித்துள்ளது.

மேலும் அதில், கடந்த 2015-ம் ஆண்டுல் மகாராஷ்ட்ராவில் மொத்தம் 3,263 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2016ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 3,080 ஆகவும், 2017-ம் ஆண்டில் மொத்தம் 2,917 விவசாயிகளும், 2018-ம் ஆண்டு 2,761 விவசாயி தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த புள்ளிவிவரங்கள் படி, 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை ஒவ்வொரு நாளும் குறைந்தது எட்டு விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். இந்தத் தற்கொலைகளில் பெரும்பாலானவை அமராவதி 144 , அதனைத் தொடர்ந்து அவுரங்காபாத் 129, நாசிக் 83, நாக்பூர் 25, புனே 15 ஆகிய மாவட்டங்களில் நிகழ்ந்துள்ளது.

மேலும் 2018-ம் ஆண்டு, ஜனவரி 1 முதல் பிப்ரவரி 28 வரை, மகாராஷ்டிராவில் மொத்தம் 396 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். அதாவது, இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 6 விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.