India
பிரபல சாமியாருக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு - பின்னணி என்ன?
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வரதைய பாளையத்தில் கல்கி ஆசிரமம் உள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆசிரமத்தின் கிளைகள் உள்ளன. கல்கி சாமியாருக்கு உலகெங்கிலும் பக்தர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கல்கி ஆசிரமங்களில் இன்று வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. ஆந்திரா, சென்னை உள்பட நாடு முழுவதும் அந்த ஆசிரமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் காலை 8 மணி முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் கோவர்த்தனபுரத்தில் உள்ள கல்கி ஆசிரம உரிமையாளரின் மகன் கிருஷ்ணனுக்கு சொந்தமான அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை நுங்கம்பாக்கம் சபி அகமது சாலையில் உள்ள அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கல்கி சாமியார் ஆசிரமத்திற்குட்பட்ட தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்துவதற்குண்டான காரணங்கள் வெளிவந்துள்ளன.
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் பிறந்த விஜயகுமார் எனும் கல்கி பகவான் சென்னையில் குடியேறி அதைத்தொடர்ந்து ஆந்திர மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆசிரமம் அமைத்தார். இவரது புகழ் உலகெங்கும் பரவியது.
இவரையும், இவரது மனைவி பத்மாவதியையும் தரிசிக்க முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். அதுமட்டுமல்லாமல் லட்சக்கணக்கில் நன்கொடை கொடுத்தால் தான் கல்கி பகவானின் தரிசனம் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டது.
மிக வேகமாக வளர்ச்சி அடைந்த கல்கி பகவானின் ஆசிரமம் நூற்றுக்கணக்கான கிளைகளாக உருவெடுத்தது. இவரது மகன் கிருஷ்ணா சொந்தமாக ஐ.டி. நிறுவனங்களை நடத்திவருகிறார். மேலும், அமெரிக்காவிலும், கர்நாடக மாநிலத்திலும் கட்டுமான தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.
ஆந்திராவின் கோவர்த்தனபுரம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் ஆசிரமத்திற்கு சொந்தமாக உள்ளன. சுமார் 1500 கோடி அளவிற்கு ஆசிரம சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆசிரமத்திற்கு சொந்தமாக, ஒன்னெஸ் யுனிவர்சிட்டி என்ற பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றும் உள்ளது.
சமீபகாலமாக கல்கி ஆசிரமம் தொடர்பாக சர்ச்சைகள் ஏற்பட்டுவருகின்றன. இதுதவிர பணப் பரிமாற்றம் தொடர்பாக முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருவதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இன்னும் ஓரிரு நாளில் ஆசிரம சோதனை முழுமையாக முடிவடையும் எனவும், வரிஏய்ப்பு மற்றும் கணக்கில் வராத பண நிலவரங்கள் குறித்த விவரங்கள் வெளியாகும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
Also Read
-
162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!