India

இந்தியாவின் முதல் தனியார் ரயிலில் வசூலிக்கப்படும் கட்டணம் எவ்வளவு தெரியுமா? - குமுறும் பொதுமக்கள்!

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளது. இதனையடுத்து பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக கோடிக்கணக்கான மக்கள் அன்றாடம் பயணம் செய்யும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியார்மயப்படுத்தும் நடவடிக்கையில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக 50 ரயில் நிலையங்களை தனியாருக்கு தாரைவார்க்கவும், ரயில்களை தனியார் இயக்கவும், பராமரிக்கவும், பயணச்சீட்டு உள்ளிட்டவற்றை தனியார் விற்பனை செய்ய அனுமதிப்பது, சரக்கு ரயில்களை தனியாருக்கு திறந்து விடுவது போன்ற அபாயகரமான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இது ரயில்வே ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படுவதால் தனியார் லாபத்திற்கு வசதியாக ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படும். இதனால், ரயில்வே துறையில் உள்ள ஒட்டுமொத்த ஊழியர்களின் நலன் பாதிக்கப்படுவதோடு பொதுமக்களின் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என முன்பே எச்சரிக்கப்பட்டது.

அதேபோல தற்போது இந்தியாவின் முதல் தனியார் ரயிலில் அதிக கட்டணம் வசூலிக்கப் டுவதாகப் புகார் எழுந்துள்ளது. டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோ இடையே தேஜஸ் எக்ஸ்பிரஸ் என்ற தனியார் ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயிலை இந்தியன் ரயில்வேயில் இருக்கும் ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்) இயக்கி வருகிறது.

இந்நிலையில், தேஜஸ் எக்ஸ்பிரஸில், அதே பாதையில் பயணிக்கும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணத்தைவிட அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

புகாரில் கூறியுள்ளபடி, டெல்லி - லக்னோ இடையேயான சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ.சி சிறப்பு பிரிவு - AC Executive வகுப்புக்கான கட்டணம் 1,855 ரூபாயாக உள்ளது. ஆனால் அதே வகுப்புக்கு தேஜஸ் ரயிலில் 2,450 ரூபாய் வரை வசுலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அதேப்போல், சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ.சி இருக்கைப் பிரிவு - AC Chair Car வகுப்புக்கான கட்டணம் 1,165 ரூபாயாகவும் உள்ள நிலையில் தேஜஸ் ரயிலில் 1, 565 ரூபாய் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ரயில்களின் கட்டணங்களை மத்திய அரசே நிர்ணயிக்க உள்ள நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி விதிகளை மீறி 100 மடங்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக ரயில்வே யூனியன் நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.