India

சிலிண்டர் டெலிவரிக்கு டிப்ஸ் கேட்பதை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை என்ன? - உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

சிலிண்டர் டெலிவரி செய்யும்போது டிப்ஸ் வசூலிக்கப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டருக்கான கட்டணத்துடன், அதை விநியோகிப்பதற்கான கட்டணமும் சேர்த்து ரசீதில் குறிப்பிடப்படும் நிலையில், சிலிண்டர்களை வீடுகளுக்கு டெலிவரி செய்பவர்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் தளங்களுக்கு ஏற்ப, 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வலுக்கட்டாயமாக கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குற்றஞ்சாட்டி சென்னை அண்ணனூரைச் சேர்ந்த மருத்துவர் லோகரங்கன் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 23 கோடி வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளதாகவும், டெலிவரிக்கு என கூடுதல் கட்டணம் என்ற பெயரில் கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டிய அவர், சிலிண்டர் டெலிவரி செய்பவர்கள் கூடுதல் பணம் வசூலிப்பது குறித்து ஆயிரக்கணக்கானோர் புகார்கள் தெரிவித்தும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர்கள் டெலிவரிக்காக கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கும் உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது போன்று 2,124 புகார்கள் உள்ளதாகவும், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு கேள்வி எழுப்பினர்.

எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தனர். இதற்கு அதை ஏன் இணையதளத்தில் வெளியிடவில்லை என்றும், டிப்ஸ் கேட்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் பதிலளிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு வழக்கு மீதான விசாரணையை நவம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.