India

“ரயில்வே துறையை தனியார்மயமாக்குவதை கண்டித்து மிகப்பெரும் போராட்டம் நடத்தப்படும்”-சிவகோபால் மிஸ்ரா பேட்டி!

அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது :

“சமீபத்தில் மத்திய அரசு அமைத்த குழு, 50 ரயில் நிலையங்கள் மற்றும் 150 ரயில்களை தனியார் மயமாக்க முடிவெடுத்துள்ளது. இந்த நடவடிக்கை துரதிருஷ்டவசமானது. 2.5 கோடி மக்கள் ஒவ்வொரு நாளும் ரயில்கள் மூலமாக பயணிக்கின்றனர்.

எங்களது ஊழியர்கள் வாரத்தின் அனைத்து நாட்களிலும், அனைத்து காலநிலைகளிலும் வேலை செய்கின்றனர். வந்தே பாரத் ரயிலை தயாரிக்கிறோம். ஏழை மக்களுக்காக ரயில்வே துறை தொடங்கப்பட்டது. ஆனால் இப்போது தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது.

5% மக்களுக்கு பயன் அளிப்பதற்காக இதுபோன்ற முடிவு எடுக்கின்றனர். நாங்கள் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்த முடிவை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளோம்.

இந்த விவகாரம் குறித்து ரயில்வே அமைச்சரை சந்தித்து, தனியார்மயம் எப்படி ரயில்வே தொழிலாளர்களை பாதிக்கும், பொதுமக்களை பாதிக்கும் என்பது குறித்து ஆலோசிக்க உள்ளோம்.

ரயில்வே துறையில் 1974ல் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. இதேபோல் மத்திய அரசு பிடிவாதமாக இருக்குமானால், ரயில்வே துறையை பாதுகாக்க மிகப்பெரிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை.

ரயில்வே கட்டண உயர்வு மக்களால் செலுத்தக்கூடிய அளவில் இல்லை. உதாரணத்திற்கு லக்னோ-டெல்லி இடையே செல்லும் சதாப்தி ரயிலில் இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டியில் கட்டணம் 680 ரூபாய், ஆனால் தனியார் ரயிலில் அதே டிக்கெட் 1,380. இரண்டு மடங்கு வசூலிக்கப்படுகிறது.

இது ரயில்வே துறையின் பிரச்னை மட்டுமல்ல, அதை பயன்படுத்துவோரின் மிகப்பெரிய பிரச்னையும் கூட. இது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு இது மிகப்பெரிய இயக்கமாக உருவாக வேண்டும். எனவே ரயிலை பயன்படுத்தும் அடித்தட்டு மக்களை காக்கும் பொருட்டு இதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம்.” எனத் தெரிவித்துள்ளார்.