India

“உலகளவில் மந்த நிலைதான், ஆனால் இந்தியாவின் நிலைமை படுமோசம்!” : ஐ.எம்.எப் இயக்குனர் எச்சரிக்கை!

இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு காரணமாக ஆட்டோ மொபைல், உணவு உற்பத்தி உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக உலக அளவில் பொருளாதார போட்டித்திறன் குறியீட்டில் இந்தியா முன்பு இருந்த இடத்தில் இருந்து 10 இடங்கள் பின்னடைவை சந்தித்துள்ளதாக உலக பொருளாதார கூட்டமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இந்நிலையில், நடப்பாண்டில் உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்கும் என்பதால், அதன் தாக்கம் இந்தியாவிலும் மிக கடுமையாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின், வாஷிங்டனில் இருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) தலைமையகத்தில், கிறிஸ்டலினா ஜார்ஜிவா நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அப்போது, ஒருங்கிணைந்த மந்த நிலையை, உலகப் பொருளாதாரம் தற்போது சந்தித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், “நடப்பு 2019 - 20 நிதியாண்டில், 90 சதவிகிதநாடுகள் பொருளாதார மந்த நிலையை சந்தித்துவருகின்றனர். இந்த மந்த நிலைக்கு பிரெக்சிட் மற்றும் அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர் ஆகியவைதான் காரணம்.” என குற்றம்சாட்டினார்.

அதுமட்டுமல்லாமல், இந்த “வர்த்தகப் போர் காரணமாக உலக அளவில், பொருளாதார வளர்ச்சி விகிதமானது, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறையப் போகிறது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக, “பிரேசில், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில், நடப்பாண்டில் பொருளாதார மந்த நிலை மிக கடுமையாக இருக்கும்” என்று கூறியுள்ள கிறிஸ்டலினா ஜியார்ஜிவா, “மந்த நிலையைத் தவிர்க்க வேண்டும் என்றால், உலக நாடுகள் ஒன்று சேர்ந்து வர்த்தகத் திறனைப் பெருக்க வேண்டும்.

கிறிஸ்டலினா ஜியார்ஜிவா

உலகப் பொருளாதாரம் இன்னும் வளர்முகமாகவே உள்ளது. ஆனால், மிகவும் மெதுவாக வளர்கிறது. இந்த நிலையை சீர்திருத்தவும் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவும் நாம் மெத்தனமாக இருந்துவிட முடியாது. நாம் இணைந்து செயலாற்ற வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

முன்னதாக இந்தியா குறித்து கடந்த செப்டம்பர் மாதமே சர்வதேச நாணய நிதியம் கூறுகையில், “இந்தியாவில் கார்ப்பரேட் ஒழுங்குமுறையில் நிச்சயமற்ற தன்மை, வங்கி சாரா நிதி நிறுவனங்களின் என பலவற்றுக்கும் இந்தியப் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அமைந்துள்ளது.

2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி என்பது மிகவும் வலிமையற்றதாகவே இருக்கும்” என்றும் சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.