India

150 ரயில்களை தனியாருக்கு தாரை வார்க்கும் பணிகளை தொடங்கியது மோடி அரசு!

மத்தியில் பாஜக அரசு ஆட்சியமைத்த நாள் முதல், நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைப்பதையே திண்ணமாக கொண்டுள்ளது. அந்த வகையில், 6 விமான நிலையங்களை கார்ப்பரேட் கம்பெனியான அதானிக்கு குத்தகைக்கு விட்டுள்ளது மோடி அரசு.

அது போல, பொதுத்துறை எரிவாயு நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தையும் முகேஷ் அம்பானி வசம் கொடுப்பதற்காக கடந்த 2016ம் ஆண்டே தேசியமயமாக்கப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கி சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

மேலும், ரயில்வே துறையையும் தனியார் மயமாக்கும் திட்டத்தில் டெல்லி முதல் லக்னோ வரை இயங்கும் தேஜஸ் அதிவேக சொகுசு ரயிலை தனியார் வசம் ஒப்படைத்துள்ளது மத்திய பாஜக அரசு.

இந்நிலையில், மேலும் 150 ரயில்கள் மற்றும் 50 ரயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக சிறப்பு அதிகாரிகள் கொண்ட குழுவும் அமைக்கப்படவுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய ரயில்வே வாரிய தலைவர் வி.கே. யாதவிற்கு நிதி ஆயோக் குழும தலைமை அதிகாரி கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், சிறப்பு அதிகாரிகள் குழுவில் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளர் ஆகியோர் இடம்பெறுவர் என கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 400 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் 150 ரயில்களும், 50 நிலையங்களுமே முதற்கட்டமாக மேம்படுத்தப்படவுள்ளன எனவும் நிதி ஆயோக் குழுமத் தலைவர் அமிதாப் கூறியுள்ளார்.

இவ்வாறு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் கொஞ்சம் கொஞ்சமாக தாரை வார்த்து வருவதால் அதில் பணிபுரியும் ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.