India

“இந்தியாவின் தந்தை என மோடியை கூறுவதா? மகாத்மா காந்தியை ட்ரம்ப் அவமதித்து விட்டார்!” : யெச்சூரி ஆவேசம்!

புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநில உரிமைகளும், மக்கள் விரோத மசோதாக்களும் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்த கருந்தரங்கில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “மோடி அரசு இந்தியாவில் செயல்படுவது போலதான், அமெரிக்காவில் டிரம்ப் அரசு செயல்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி, அமெரிக்காவில் ட்ரம்புக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

பிரதமர் மோடிக்கும், அதிபர் ட்ரம்புக்கு ஒரே விதமான ஒற்றுமை உள்ளது. அதுஎன்னவென்றால் இருவருமே சொந்த நாட்டு மக்களை பிளவுப்படுத்துவதும், சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு அரசியலை திணிப்பதுமே. ஆகவே, பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகிய இருவரின் சித்தாந்தமும் ஒன்றுதான்.

மேலும், இந்தியாவின் தந்தை மோடி தான் என ட்ரம்ப் கூறுகிறார். இதன் மூலம் மகாத்மா காந்தியை ட்ரம்ப் அவமதித்து விட்டார். அவருக்கு இந்தியாவின் வரலாறு தெரியுமா?” என யெச்சூரி கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “மோடி ஆட்சிக்கு வந்தபிறகு, அரசியல் சாசனம் உறுதி செய்யப்பட்ட ஜனநாயக உரிமைகள் அழிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசனம் மிகவும் மோசமான நெருக்கடியில் சிக்கியுள்ளது. தனது அரசியல் ஆதாயத்துக்காக இந்துத்துவ ராஜ்ஜியத்தை உருவாக்கும் சித்தாந்தத்துக்காக அரசியல் சாசனத்தை நொறுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கான உதாரணம் தான் காஷ்மீர் விவகாரம். இதுவரை காஷ்மீர் இந்தியாவோடு சேராமல் இருந்ததாகவும், தற்போது தான் இணைந்துவிட்டதாகவும் கூறுகிறார்கள். இது உண்மைக்கு புறம்பானது.

மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கும் வேலையைதான் மோடி அரசாங்கம் செய்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் 4 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு மோடி அரசு கையாண்ட விதமே காரணம்” என குற்றம்சாட்டினார்.

அதுமட்டுமல்லாமல்,“ தேசிய குடிமக்கள் பதிவேடு முறையை நாடுமுழுவதும் மோடி அரசுக் கொண்டுவரவுள்ளது. அதன்மூலம் யாரெல்லாம் இந்துக்கள் இல்லையே, அவர்களை குடிமக்கள் அல்லாதோர் என அகற்றிவிடுவார்கள். அதற்காகவே இந்த திட்டத்தைத் செயல்படுத்த துடிக்கிறார்கள்.

மேலும், “ரூ.2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உதவியும், நிவாரணமும் பணக்காரர்களுக்கு அரசு தந்துள்ளது. மறுபக்கத்தில் ஏழை மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாத நிலை உள்ளது. வாங்கும் சக்தியை அதிகரித்தால்தான் பொருளாதார மந்தநிலை மாறும்.

பணக்காரர்களுக்கு கொடுத்ததற்கு பதிலாக நாட்டின் உள்கட்டமைப்பை உருவாக்கும் பணியை செய்திருக்கலாம். இதனால் வேலைவாய்ப்பு உருவாகி இருக்கும். இந்தியா பாதுகாக்கப்பட வேண்டும். இந்துத்துவ பக்தியை விட, இந்திய தேசபக்தியே தேவை”. என அவர் தெரிவித்துள்ளார்.