India
சொன்னது 21 மில்லியன் ஹெக்டேர், நிறைவேற்றியது 0.8 ஹெக்டேர்: மோடி அரசின் வாய்ச்சவடால் அம்பலம்!
புது தில்லியில் ஐக்கிய நாடுகள் சபையின் பாலையாகுதல் எதிர்ப்பு கூட்டமைப்பின் மாநாடு (United Nations Convention to Combat Desertification (UNCCD)) நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலகில் உள்ள 190-க்கும் மேற்பட்ட நாடுகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பாக பிரதமர் மோடியும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்டனர்.
காலநிலை மாற்றத்தின் காரணமாக உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் உலகில் ஏதோவொரு மூலையில் 23 ஹெக்டேர் நிலம் வளத்தை இழந்தும் மரங்களை இழந்தும் பாலையாகிக் கொண்டிருக்கிறது. இதை பற்றி கவலை தெரிவித்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபை, இழந்து கொண்டிருக்கும் நிலங்களால், ஒவ்வொரு நாளும் 130 கோடி டாலருக்கான செலவு அதிகரித்துக் கொண்டிருப்பதாக கூறுகிறது. அதனால் நீர் சேமிப்பு, விவசாயம் குறைந்து கொண்டுமிருக்கிறது.
நிலங்கள் பாலையாவதை தடுக்க ஐ.நா சார்பில் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு தான் UNCCD அமைப்பு. கடந்த 2015ம் ஆண்டு பாரிசில் உலகநாடுகள் கூடி காலநிலை மாற்றம் குறித்து விவாதித்து கார்பன் வாயு வெளியீட்டை குறைக்கும் வண்ணம் பல இலக்குகள் நாடுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டன.
காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்கவும், அதிக காடுகளை உருவாக்கவும் முடிவு எடுக்கப்பட்டு அதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் இந்தியாவிற்கு 21 மில்லியன் ஹெக்டேர் அளவிற்கு காடுகள் உருவாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
எல்லா நாடுகளை காட்டிலும் அதிகமாக நிலத்தை இழந்து கொண்டிருப்பது இந்தியாதான். மொத்த நிலப்பகுதியின் 30% பகுதியை ஏற்கனவே பாலையாக்கி வைத்திருக்கிறது இந்தியா.
தற்போது வரை இந்திய அரசு வெறும் 0.8 மில்லியன் ஹெக்டேர் அளவிற்கு மட்டுமே மரங்களை வளர்த்துள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி இந்த மாநாட்டில், “இந்தியா தனது நில மறுசீரமைப்பு இலக்குகளை 21 மில்லியன் ஹெக்டேரில் இருந்து 26 மில்லியன் ஹெக்டேருக்கு மேல் உயர்த்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து பேசிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “செயற்கைக்கோள் மற்றும் ட்ரொன் மூலம் புகைப்படம் எடுத்து ஆண்டுதோறும் காடழிப்பு கண்காணிக்கப்படும். தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு மரங்கள் வளர்க்க உத்தரவிடப்படும். பிளாஸ்டிக்கை முடிவுக்கு கொண்டுவருவதில் அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது” என்று கூறினார்.
முந்தைய இலக்கான ’21 மில்லியன் ஹெக்டேர் காடுகள் உருவாக்கம்’ என்பதில் இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன, அதற்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு, தற்போதைய இலக்கு எப்படி எட்டப்படும் போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவை எதற்கும் பிரகாஷ் ஜவடேகர் விரிவான பதில் எதையும் அளிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து சூழலியலாளர் ஒருவர் கூறுகையில், “முன்பு நிர்ணயிக்கப்பட்ட இலக்கையே முடிக்காத நிலையில், புதிதாக 26 மில்லியன் ஹெக்டேருக்கு இலக்கை உயர்த்தியுள்ளோம் என மோடி பேசியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்திள்ளது.
”உலக நாடுகள் முன்பு சுற்றுசூழலை பாதுகாக்க இந்தியா தீவிரம் காட்டுவதாக மோடி கூறுகிறார். இது அப்பட்டமான பொய் என்றே தெரிகிறது. அதுமட்டுமின்றி பட்ஜெட்டில் எவ்வளவு ஒதுக்கினார்கள் என்ன பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று விவரமும் தெரியவில்லை. ஆனால் அதை செய்கிறோம் இதை செய்கிறோம் என்று வாய்சவடால் மட்டும் பேசுகிறார்கள்.
”விவசாயம், நிலம், மண் ஆகியவற்றை பாதிக்கும் திட்டங்கள் அனைத்தையும் அனுமதித்துவிட்டு எப்படி இயற்கையை பாதுகாக்க முடியும்? நிலத்தடி நீர் அளவு குறைந்துவருகிறது. விவசாய நிலங்கள் தரிசாகியுள்ளது. இச்சூழலில் அரசு வெறும் வார்த்தைகள் மட்டும் உதிர்க்காமல், களத்தின் சூழலை புரிந்து கொண்டு செயல்படவேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!