India

‘டியர் விக்ரம்... சிக்னலை மீறியதற்காக அபராதம் விதிக்கமாட்டோம்” - வைரலாகும் நாக்பூர் போலிஸாரின் ட்வீட்! 

கடந்த ஜூலை மாதம் நிலவின் தென் துருவப் பகுதிக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் கடந்த செப்டம்பர் 7ம் தேதி நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தியர்கள் மட்டுமல்லாது உலகமே இந்த நிகழ்வை உற்றுநோக்கியிருந்தது ஆனால், நிலவுக்கு 2.1 கி.மீ தொலைவிலேயே விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, சந்திரயான் 2 வெற்றியைக் கொண்டாட ஆவலாகக் காத்திருந்தவர்கள் சோகமயமாகினர்.

பின்னர், நேற்று ஆர்பிட்டரில் உள்ள கேமரா மூலம் விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டறியப்பட்டது. விக்ரம் லேண்டர் நிலவிலிருந்து 500 மீ தொலைவில் இருப்பதாக இஸ்ரோ அறிவித்தது.

இந்நிலையில், நாக்பூர் நகர காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் லேண்டர் குறித்து ஒரு நகைச்சுவையாக ஒரு ட்வீட் பதிவிடப்பட்டுள்ளது. அதில், ‘டியர் விக்ரம், தயவுசெய்து பதில் கூறு... சிக்னலை மீறிவிட்டதற்காக நாங்கள் உன் மீது அபராதம் விதிக்கப்போவதில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 1ம் தேதியிலிருந்து நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் படி, பத்து மடங்கு அதிகமாக அபராதத் தொகை விதிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மிக அதிகமான தொகை அபராதமாக வசூலிக்கப்படுவதால், ஆங்காங்கே வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் தான், அதோடு தொடர்புபடுத்திக்கொள்ளும் விதமாக நாக்பூர் நகர போலிஸார் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளனர். இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.