India
'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டத்தில் தமிழ்நாடு சேர முடிவு..? - டெல்லியில் அமைச்சர் காமராஜ் சூசகம்!
நாடு முழுவதும் உள்ள எந்த நியாயவிலை கடையிலும் சென்று தங்களுக்குத் தேவையான பொருட்களை நுகர்வோர் வாங்கி கொள்ளும் வகையிலான திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டத்தின் கீழ் இதைக் கொண்டு வருவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் பல அம்சங்கள், மாநில உரிமைகளை பறிக்கும் விதமாக இருப்பதாக தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்க அனைத்து மாநில உணவுத் துறை அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
அதில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், ”பிற மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் தொழிலாளர்கள், ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளும் முறை விரைவில் அமல்படுத்தப்படும்.” என்று கூட்டத்தில் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். இதன் மூலம் ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் தமிழகமும் இணைய ஒப்புதல் அளித்திருப்பதை உணர்த்துகிறது.
கூட்டத்தில் பேசிய மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், இதுவரை 14 மாநிலங்கள் இந்த திட்டத்தில் சேர தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். டிசம்பர் மாதத்தில் அந்த மாநிலங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுவிடும். தமிழகத்தில் ஆதார் இணைப்பில் சில சிக்கல்கள் உள்ளதாகவும் அது சரி செய்யப்பட்டவுடன் தமிழகமும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுவிடும் என்றும், இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் பாஸ்வான் தெரிவித்தார்.
முன்னதாக தமிழக சட்டசபையில் ''ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை'' விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசினார் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு. அப்போது தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் பொது விநியோக திட்டத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தமிழக அரசு முடிவெடுக்கும் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில், அதே அமைச்சர், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை தமிழகம் ஏற்றுக் கொள்கிறது என்ற வகையில் பேசியிருப்பது, பா.ஜ.க அரசுக்கு பணிந்து போகும் அ.தி.மு.கவின் அடிமைத்தனத்தையே காட்டுகிறது.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!