India

“கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவவே வங்கிகள் இணைப்பு!” - வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு விளாசல்!

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றதற்குப் பின்னர், பொருளாதாரம் கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது. நேற்று வெளியிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகித சரிவு குறித்த தரவு பல்வேறு தரப்பினருக்கும் கவலையைத் தந்துள்ளது.

இதற்கிடையே, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக மாற்றும் வகையில் வங்கி இணைப்பை நேற்று அறிவித்தார். மத்திய அரசின் இந்த முடிவுக்கு வங்கி ஊழியர்கள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசு வங்கிகள் இணைப்பு முயற்சியால் ஒருபோதும் வாராக் கடனை மீட்க முடியாது என அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சி.ஹெச் வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

“மத்திய அரசு வங்கிகளை இணைக்கிறோம் என்ற முயற்சியில், வங்கிகளின் வாராக் கடனை மீட்கலாம் என்று நம்புகிறது. ஆனால், மிகப்பெரிய அளவில் இருக்கும் வாராக் கடனை இந்த நடவடிக்கையால் மீட்க முடியாது. உண்மையில் வங்கிகள் இணைப்பின் முக்கிய நோக்கம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவுவதற்காகத்தான்.

கடந்த நிதியாண்டில் அரசு வங்கிகள் ஈட்டிய ஒட்டுமொத்த லாபம் ரூ.ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடியாகும், வாராக்கடனால் வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்பு மட்டும் ரூ.60 ஆயிரம் கோடியாகும்.

இந்த வங்கி இணைப்பு மூலம் எந்தவிதமான பலனும் கிடைக்காது. மாறாக, 5 துணை வங்கிகளை ஸ்டேட் வங்கியுடன் இணைத்த பின், வங்கியின் வாராக்கடன்தான் அதிகரித்துள்ளது.

நீரவ் மோடியின் மோசடியை கண்டுபிடிக்க பஞ்சாப் நேஷனல் வங்கி தவறிவிட்டது, அப்படியிருக்கும் வங்கிகள் எவ்வாறு மிகப்பெரியதாக மாற்றும்போது, எவ்வாறு சிறந்த கண்காணிப்பில் ஈடுபடமுடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வெங்கடாச்சலம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "மத்திய அரசு வங்கிகளை இணைக்கும் முடிவு தவறான நேரத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவாகும். அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 10 வங்கிகளை 4 வங்கிகளாக இணைப்பதன் மூலம் 6 வங்கிகள் மூடப்படுகிறது. இது 6 வங்கிகளையும் உயிரோடு கொலை செய்வதற்குச் சமம்.

உலகளவில் 2008-ம் ஆண்டு மிகப்பெரிய மந்தநிலை வந்தபோது, இந்தியாவை காப்பாற்றியது இந்திய வங்கி முறைதான். அதற்கு முக்கியக் காரணம் பொதுத்துறை வங்கிகள்தான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.