India

இந்தியாவின் மோசமான நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்? : 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது பலரையும் கலக்கமடையச் செய்துள்ளது.

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்றது தொடங்கி, இந்திய பொருளாதாரம் பலத்த சரிவைச் சந்தித்து வருகிறது. வேலைவாய்ப்பின்மை வெகுவாக அதிகரித்ததோடு, பல நிறுவனங்களை மூடக்கூடிய அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக மிகப்பெரும் தோல்வியைக் கண்டுள்ளதாக பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்திய பங்கு சந்தைகள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு சரிவுடன் தொடங்கியுள்ளன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 94 புள்ளிகள் சரிந்து 10,647 ஆகவும், மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 346 புள்ளிகள் சரிந்து 36,127 ஆகவும் வர்த்தமாகிறது. பலவீனமான வர்த்தகத்தாலும், இந்தியாவில் நிலவும் பொருளாதாரச் சீரழிவாலும் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்டிருக்கும் ஆட்டோமொபைல் தொழில் நசிவு, உற்பத்தி நிறுத்தம், தொழிலாளர் வேலையிழப்பு மற்றும் பல்வேறு தொழில்களில் நிலவும் தேக்க நிலை உள்ளிட்ட காரணிகள் நாட்டில் பொருளாதார மந்தநிலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கிய நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் மேலும் குறைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் குறைந்து தற்போது 72 ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.