India

காஷ்மீர் விவகாரத்தில் மோடி, அமித்ஷாவின் ராஜதந்திரம் பற்றி தெரியாமல் யாரும் பேசக்கூடாது - ரஜினி பேச்சு !

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான அந்தஸ்தை ரத்து செய்து, அம்மாநிலத்தை இரண்டாக பிரித்து உத்தரவிட்டது மோடி மற்றும் அமித்ஷாவின் ராஜ தந்திரத்தை குறிக்கிறது என நடிகர் ரஜினி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே கடந்த சில தினங்களுக்கு முன், காஷ்மீர் விவகாரத்தில் மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணனும், அர்ஜூனனும் போன்று செயல்பட்டிருக்கிறார்கள் என பாராட்டி ரஜினி பேசி இருந்தது சர்ச்சைக்குள்ளானது.

இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும், ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசி ஒருபடி மேலே சென்று, மோடியும் அமித்ஷாவும், கிருஷ்ணனும், அர்ஜூனனும் என்றால் நாட்டில் மீண்டும் மகாபாரத போர் மூளவுள்ளதா? அப்படியானால் பாண்டவர்களும், கெளரவர்களும் யார்? கர்ணன் யார்? என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, நாட்டின் பாதுகாப்பு குறித்த விவகாரத்தை ராஜதந்திரத்தோடு மோடியும், அமித்ஷாவும் செயல்படுத்தியிருக்கிறார்கள். தீவிரவாதிகளின் தாய்வீடாக இருந்த காஷ்மீர் இனி இந்த நடவடிக்கையால், வளர்ச்சி பெறும். அதனால்தான் பாராட்டினேன். எதை அரசியலாக்குவது, எதை அரசியலாக்கக் கூடாது என்பதை நம் அரசியல்வாதிகள் உணர வேண்டும் என பேசியுள்ளார்.

மேலும், தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமளிக்கிறது என ரஜினி கூறியுள்ளார். மீண்டும் காஷ்மீர் விவகாரம் குறித்து ரஜினி பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.