India

“மோடி எவ்வளவு எளிமையானவர் தெரியுமா?” : Man vs Wild பியர் க்ரில்ஸ் நெகிழ்ச்சி... நெட்டிசன்கள் அதிர்ச்சி!

டிஸ்கவரி தொலைக்காட்சியில் பிரதமர் மோடி பங்கேற்கும் மேன் Vs வைல்ட் நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி ஒளிபரப்பாகிறது. புல்வாமா தாக்குதலில் 44 இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டபோது பேர் க்ரில்ஸுடன் ஷூட்டிங்கில் இருந்த மோடி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ‘Man vs Wild' ஷூட்டிங்கின்போது பிரதமர் மோடியுடனான தனது அனுபவங்கள் குறித்து பியர் க்ரில்ஸ் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்துள்ளார்.

அதில், "நானும், இந்திய பிரதமர் மோடியும் பயணித்தபோது பெரிய கற்களில் சில நேரம் மோதிக் கொண்டோம், கடும் மழையில் சிக்கிக் கொண்டோம். எனது படப்பிடிப்புக் குழுவினர் கொஞ்சம் பதற்றமாகவே இருந்தனர். ஆனால், பயணம் முழுவதுமே பிரதமர் மோடி மிகவும் அமைதியாக இருந்தார். பிரதமர் மோடி நெருக்கடி நேரத்திலும் சலனமில்லாமல் இருந்தது சிறப்பான விஷயம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “பிரதமர் மோடியின் எளிமை என்னை மிகவும் கவர்ந்தது. ஒருகட்டத்தில், நாங்கள் கனமழையில் சிக்கிக்கொண்டோம். அப்போது மோடியின் பாதுகாவலர்கள் அவருக்கு குடை பிடிக்க முயன்றனர். ஆனால் மோடியோ அதை வேண்டாம் எனத் தடுத்துவிட்டார்.

ஆற்றைக் கடக்க நான் ஒரு படகைச் செய்தேன். அந்தப் படகு சரியானதாக இல்லை. படகு பிரதமர் பயணிக்கும் அளவுக்கு பலமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இல்லை என பாதுகாப்புக் குழுவினர் ஆட்சேபம் தெரிவித்தனர். ஆனால் பிரதமர் தனக்கு அந்தப் படகு தனக்கு திருப்தியளிப்பதாகக் கூறி என்னோடு பயணித்தார்.

மோடி பயணம் முழுவதுமே என்னோடு மிகவும் இணக்கமாக செயல்பட்டார். என் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தார். ஆர்ப்பரிக்கும் ஆற்றின் நடுவேகூட பிரதமர் அமைதியாக புன்னகையுடன் திகழ்ந்தார்" என வகைதொகையில்லாமல் பாராட்டியுள்ளார் பியர் க்ரில்ஸ்.

மோடி பத்து லட்ச ரூபாய் மதிப்பிலான ஆடை அணிந்தது முன்பு சர்ச்சையானது. முழுக்க முழுக்க திட்டமிடப்பட்டு படம்பிடிக்கப்படும் ‘man vs wild' நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் க்ரில்ஸ் மோடியை எளிமையானவர் எனத் தெரிவித்திருப்பது தற்போது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.