India

அண்ணா இருந்திருந்தால் இதற்கு அனுமதித்திருக்க மாட்டார் - மருத்துவ ஆணைய விவகாரத்தில் ஜெய்ராம் ரமேஷ் அதிரடி!

தேசிய மருத்துவ ஆணைய மசோதா எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மாநிலங்களவையில் அந்த மசோதா மீதான விவாதம் இன்று நடைபெற்றது. மசோதாவில் உள்ள சில அம்சங்களுக்கு ஆட்சேபனம் தெரிவித்து பேசினார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்.

அதில், “நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஏழு பரிந்துரைகளை ஓரளவு மட்டுமே ஏற்பதாக கூறுவதன் மூலம், நிலைக்குழுவின் உணர்வை இந்த மசோதா அவமதிக்கிறது. இதன் மூலம் அரசியலமைப்பு சட்டத்தையும் மத்திய அரசு அழிக்கிறது.” என குற்றஞ்சாட்டினார்.

மேலும் தொடர்ந்த அவர் ” மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை மாநில அரசுகளிடம் உள்ள உரிமை. மசோதாவின் 4வது பகுதியில், ஆணைய உறுப்பினர் குழுவில் மத்திய அரசு நியமிக்கும் 14 பேரும், மாநில அரசு சார்பில் 6 பேரும், மீதமுள்ள 5 பேர் மருத்துவர்களாகவும் நியமிக்கப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால், நிலைக்குழுவோ மத்திய அரசு சார்பில் 10, மாநில அரசு சார்பில் 10, மருத்துவர்கள் 9 பேர் இருக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

நிலைக்குழுவின் பரிந்துரை ஒரு புறம் இருக்கட்டும். என்னுடைய பரிந்துரை, 14,15,5 என மாற்றியமைக்க வேண்டும் என்பதே. உறுப்பினர்க் குழுவில் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும். மத்திய அரசின் திட்டப்படி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டால் மாநில அரசின் உரிமை பறிபோகும்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறையே ஆணையத்தில் மாநில உறுப்பினர்களுக்கு இடம் கிடைக்கும். ஆனால் 14,15,5 என்ற கணக்கில் உறுப்பினர்கள் நியமித்தால் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை, சுழற்சிமுறையில் மாநிலங்களுக்கு உறுப்பினர்களாக வாய்ப்பு கிடைக்கும். மருத்துவ கல்வியில் மாநிலத்தின் உரிமை பறிபோகாமல் இருக்கும். மருத்துவத் துறையும் மேம்படும்.

5 ஆண்டுகள் எம்.பியாக இதே இடத்தில் அமர்ந்திருந்து அவை நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் பேரறிஞர் அண்ணா. 4 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் ஜெயலலிதா. மாநில உரிமைகள் பறிபோகும் இந்த மசோதாவுக்கு அவர்கள் இருந்திருந்தால் அனுமதித்திருக்க மாட்டார்கள்.

எனவே மாநிலக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் இந்த மசோதாவை நிறைவேறவிடாமல் செய்ய வேண்டும். 14,6,5 என்ற முறையில் மத்திய அரசு அமைக்க நினைக்கும் தேசிய மருத்துவ ஆணைய உறுப்பினர்க் குழு, முற்றிலும் அரசியலமைப்புக்கு எதிரான செயல்.” என தனது எதிர்ப்பை வலுவாக பதிவு செய்துள்ளார்.