India

25 விமான நிலையங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் மோடி அரசு : அதிர்ச்சியில் அதிகாரிகள்!

பா.ஜ.க ஆட்சி அமைந்ததிலிருந்து பன்னாட்டு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு ஏராளமான வரிச் சலுகை, கார்ப்ரேட்க்கு ஆதரவான டெண்டர், பொதுத்துறையை கார்ப்ரேட் வசம் ஒப்படைப்பு என பல உதவிகளை முனைப்புடன் செய்து வருகிறது. ஏன் அண்மையில் கூட மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் தனது விசுவாசத்தைக் காட்டும் வகையில் பல சலுகையை பட்ஜெட் வாயிலாக கொடுத்துள்ளது.

மேலும் கார்ப்ரேட்டுக்கு ஆதரவாக ரயில்வே துறை மற்றும் அதன் அச்சகம் போன்றவற்றைத் தனியாருக்கு விற்கப்போவதாக நாடாளுமன்றத்திலேயே துணிந்து பா.ஜ.க அறிவித்துள்ளது. இதற்கு வரும் எதிர்ப்புகளை சற்றும் காதில் வாங்கிக் கொள்ளாமல் மெத்தனப்போக்குடன் பா.ஜ.க செயல்படுகிறது என பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம், லக்னோ மற்றும் கவுகாத்தி ஆகிய 6 விமான நிலையங்களின் நிர்வாகத்தை, தனியாருக்கு அளிப்பதாக மோடி அரசு கடந்தாண்டு முடிவெடுத்தது. இதற்காக ஏலமும் அறிவித்தது. இதில், அதிகத் தொகைக்கு ஏலம் கேட்டார் என்கிற அடிப்படையில் தான், 3 விமான நிலையங்களை அதானிக்கு மோடி அரசு ஜூலை தொடக்கத்தில் குத்தகைக்கு விட்டுள்ளது.

இதனையடுத்து தற்போது, இரண்டாம் கட்ட நடவடிக்கையாக மேலும் 20 முதல் 25 விமான நிலையங்களை தனியாருக்குக் கொடுப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த விமான நிலையங்களின் ஏலத்திற்கு வெளிநாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு விமான நிலைய நிறுவனங்களும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் குருபிரசாத் மகோபாத்ரா தெரிவித்துள்ளார்.

மேலும், இதுதொடர்பாக அவர் கூறியதாவது, “லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம், கவுஹாத்தி ஆகிய 6 விமான நிலையங்களை நிர்வகித்தல், மேம்படுத்துதல், இயக்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள தனியாருக்கு ஒப்படைக்கும் ஏலம் நடைபெற்றது. இதில் அதிக தொகைக்கு அதானி குழுமம் ஏலம் எடுத்துள்ளது. அதன் படி அதானி குழுமத்திற்கு விமான நிலையங்களை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, இரண்டாம் கட்ட நடவடிக்கையாக 20 முதல் 25 விமான நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படும். ஆண்டுக்கு 15 லட்சம் மற்றும் அதற்கு மேல் பயணிகள் போக்குவரத்து உள்ள விமான நிலையங்களின் பெயர்களை சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் பரிந்துரை செய்ய, இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) முடிவு செய்துள்ளது. அதன் படி இறுதி முடிவை சிவில் விமான போக்குவரத்து துறை எடுக்கும் என்றும் மகோபாத்ரா தெரிவித்தார்.

விமானநிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால் அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் ஒன்று அரசு பதவியை ராஜினாமா செய்துவிட்டு, குத்தகைக்கு எடுக்கும் தனியார் நிறுவனத்திடம் வேலைக்குச் சேர வேண்டும்.

இல்லாவிட்டால் வேறு விமான நிலையங்களுக்கு பணிமாறுதல் பெற்றுச் செல்ல வேண்டும். இதனால் ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். விமான நிலையங்களைத் தனியார் மயமாக்கும் முயற்சியைக் கண்டித்தும் நாடுமுழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.