India

நியூமராலஜி பார்த்து பெயரை மாற்றிக்கொண்ட எடியூரப்பா : இந்த முறை முதல்வர் பதவியை விடமாட்டேன் என சபதம்

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்த நிலையில், அதிக உறுப்பினர்களை வைத்துள்ள கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க ஆட்சியமைக்க உரிமை கோரியது. ஆளுநரின் அழைப்பின் பேரில் எடியூரப்பா நேற்று மாலை நான்காவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார்.

இதற்கு முன்னர் 3 முறை முதல்வராக இருந்தபோதிலும், எடியூரப்பா ஒருமுறை கூட முழுமையாக ஆட்சி செய்ததில்லை. 2007ம் ஆண்டு வெறும் 7 நாட்கள் மட்டுமே முதல்வராக இருந்தார் எடியூரப்பா. 2008ம் ஆண்டில் மீண்டும் பதவியேற்ற அவர் மூன்று வருடங்களுக்கு மேல் பதவியிலிருந்தார். கடந்த 2018ல் மூன்றாவது முறையாகப் பதவியேற்ற அவர் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் 6 நாட்களில் பதவியை இழந்தார்.

இந்த முறையும் தேர்தலுக்குப் பிறகு ஒரு ஆண்டு முடிந்த பிறகே முதல்வராகியிருக்கிறார். எடியூரப்பா முழுமையாக 5 ஆண்டுகள் பதவி வகித்தது கிடையாது. இந்த் முறையாவது முழுமையாக ஆட்சியில் இருக்கவேண்டும் என்பதற்காக தனது பெயரின் ஆங்கில எழுத்துகளை மாற்றிக்கொண்டுள்ளார் எடியூரப்பா.

பி.எஸ் எடியூரப்பாவின் முழுப்பெயர் புக்கனகெரெ சித்தலிங்கப்பா எடியூரப்பா. ஆன்மீகம், ஜோதிடம், நியூமராலஜி ஆகியவற்றில் அதீத நம்பிக்கை கொண்ட எடியூரப்பா, தற்போது நான்காவது முறையாக தனது பெயரின் ஆங்கில எழுத்துகளை மாற்றியுள்ளார்.

1980-களில் அவரது பெயர் Yadiyoorappa என இருந்தது. 1990-களில் Yediyurappa என மாற்றினார். பின்னர், 2000-ம் ஆண்டில் நியூமராலஜி அடிப்படையில் Yeddyurappa என எழுத்துகளை மாற்றினார். தற்போது மீண்டும் Yediyurappa என்ற பெயருக்கே திரும்பியுள்ளார்.

மேலும், தனது பச்சை துண்டு சென்டிமென்டையும் எடியூரப்பா பதவியேற்கும்போது தவறவிடவில்லை. கடந்த முறை பதவியேற்றபோதும் பச்சைத்துண்டு அணிந்தே பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.