India

‘நீட்’ தற்கொலைகள் குறித்து டேட்டா இல்லை : மத்திய அரசின் பதிலால் அதிர்ச்சி!

‘நீட்’ தேர்வு ஏற்படுத்திய உயிரிழப்புகள் தொடர்பாக எந்தத் தகவலும் தங்களிடம் இல்லை என மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எந்தெந்த மாநிலங்களில் நீட் விலக்கு கோரப்பட்டுள்ளது; அவர்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் என்ன; நீட் தேர்வு தோல்வியால் நாடு முழுவதும் நிகழ்ந்த தற்கொலைகளின் எண்ணிக்கை என்ன?; அவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணங்கள் என்னென்ன? என்பது குறித்த பல்வேறு கேள்விகள் தி.மு.க எம்.பி-க்கள் உள்ளிட்ட மக்களவைப் பிரதிநிதிகளால் மக்களவையில் எழுப்பப்பட்டன.

இதற்கு, மத்திய சுகாதாரத்துறையும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளன. அதில், தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகள் மட்டுமே நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரியிருப்பதாகவும், விலக்களிப்பது குறித்து எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, நீட் தேர்வால் உயிரிழந்தவர்காள் குறித்து, எந்தவித தகவலும் தங்களிடம் இல்லை எனத் தெரிவித்துள்ளன மோடி அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், சுகாதாரத்துறையும்.

மருத்துவம் படிப்பதற்குத் தேவையான மதிப்பெண்களை +2 தேர்வில் பெற்றிருந்தும் நீட் தேர்வால் மருத்துவப் படிப்பு வாய்ப்பை இழந்த அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ, ஏஞ்சலின் சுருதி ஆகியோர் கடந்த ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

நீட் விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டு 2017ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதியே திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. அதனை மறைத்து மத்தியில் ஆளும் பா.ஜ.க-வுக்கு தனது விசுவாத்தைக் காட்டி தமிழக மாணவர்களை வஞ்சித்தது தமிழக அரசு.

இந்நிலையில், நீட் எனும் அநீதித் தேர்வால் பலியான மாணவர்களின் விவரங்களைக் கூடச் சேகரிக்காமல் மிகுந்த அலட்சியமாக மத்திய, மாநில அரசுகள் நடந்துகொண்டிருப்பது மக்களிடையே பலத்த அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.