India

15 ஆண்டுகள் டெல்லி முதல்வர்.. காங்கிரஸ் மூத்த அரசியல்வாதி - ஷீலா தீட்சித் காலமானார்

டெல்லியின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் தனது 81 வயதில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு மூத்த அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவை சேர்ந்த ஷீலா தீட்சித் டெல்லியில் பள்ளிப்படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். அரசியல் செயல்பாட்டில் ஈடுபாடு கொண்ட ஷீலா காங்கிரஸில் சேர்ந்து 1984ம் ஆண்டில் உத்தர பிரதேசத்தின் கன்னூஜ் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1986-1989 களில் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் மத்திய அமைச்சராகப் பணியாற்றினார். முதலில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் இணை அமைச்சராகவும், பிறகு பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சராகவும் பணியாற்றினார்.

1990ம் ஆண்டில் உத்தர பிரதேசத்தில், பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான போராட்டத்துக்கு தலைமை தாங்கியதற்காக கைது செய்யப்பட்டு 23 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தக் கைது நடவடிக்கையால் எழுச்சியடைந்த ஆயிரக்கணக்கான உத்தரப் பிரதேச மக்களும் இப்போராட்டத்தில் பங்குபெற்று சிறை சென்றனர்.

1998ல் கோல் மார்க்கெட் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார். 1998 முதல் 2013ம் ஆண்டு வரை 15 ஆண்டுகள் டெல்லியின் முதலமைச்சராகப் பணியாற்றியவர் ஷீலா தீட்சித். டெல்லியின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றிய ஷீலா தீட்சித் டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தை உருவாக்கியதிலும் முக்கியப் பங்காற்றினார்.

2013 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த ஷீலா, பின்னர் 2015ம் ஆண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை கேரள மாநிலத்தின் ஆளுநராகப் பணியாற்றினார்.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு ஷீலா தீட்சித் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

81 வயதான ஷீலா தீட்சித், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்ட நிலையில் மாரடைப்பால் சற்று முன்பு காலமானார். அவருக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.