India

பொருளாதார பாதிப்பு : கடும் சரிவைச் சந்தித்த இந்தியாவின் ஏற்றுமதி!

நாட்டின் ஏற்றுமதி - இறக்குமதி விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதில், கடந்த 8 மாதங்களில் இல்லாத வகையில் ஜூன் மாதத்தில் 9.71 சதவீதம் வரை ஏற்றுமதி சரிவைச் சந்தித்துள்ளது தெரிய வந்துள்ளது.

ஜூன் மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 2,501 கோடி டாலராக உள்ளது. இது முந்தைய ஆண்டு ஜூன் மாதத்தில் 2,770 கோடி டாலராக இருந்தது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 9.71 சதவீதம் சரிவவைச் சந்தித்துள்ளது.

நவரத்தினங்கள், ஆபரணங்கள், பொறியியல் சாதனங்கள், பெட்ரோலியப் பொருட்கள், பிளாஸ்டிக், கைவினைப் பொருட்கள், அனைத்துப் பிரிவு ஆயத்த ஆடைகள், ரசாயனம், தோல், கடல் பொருட்கள், எண்ணெய் வித்துகள் ஆகியவற்றின் ஏற்றுமதி சரிவால், ஒட்டுமொத்த ஏற்றுமதி குறைந்துள்ளது.

வர்த்தகப் பற்றாக்குறை 1,528 கோடி டாலராக உள்ளது. முந்தைய ஆண்டு ஜூன் மாதத்தில் இது 1,660 கோடி டாலராக இருந்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வர்த்தகத் துறை செயலர் அனுப் வாதவன், “உலக அளவிலான போக்குகள், கடந்த சில மாதங்களாக, நாட்டின் ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. உலக வங்கி, கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையிலும், நடப்பு ஆண்டில் உலகளாவிய வர்த்தகம் மந்தமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.” எனக் கூறியுள்ளார்.