பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
DMK Government

எரிபொருட்களை GSTகீழ் கொண்டுவராது ஏமாற்றும் பாஜக: வாக்குச்சீட்டின் வலிமை அசாத்தியமானது -தினகரன் தலையங்கம்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் காஸ் விலையை இஷ்டத்துக்கு உயர்த்தி வருகின்றன. முன்பெல்லாம் ஆண்டுக்கு ஒருமுறை பட்ஜெட் போடும் போது விலை உயர்வு, என்பது நடைமுறையில் இருந்தது. ஆனால், இப்போது அந்த கலாச்சாரம் அடியோடு குழி தோண்டி புதைக்கப்பட்டுவிட்டது.

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 93.11, டீசல் 86.45க்கு விற்கப்பட்டது. சமையல் காஸ் சிலிண்டர் 835க்கு விற்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் 610க்கு விற்கப்பட்ட சமையல் காஸ்சிலிண்டர், 4 மாதத்தில் 225 விலை உயர்ந்துள்ளது. மத்திய அரசின் அனைத்து முடிவுகளையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் தமிழக அரசு, இந்த விலை உயர்வு பற்றி கண்டு கொள்வதில்லை.

பெயரளவுக்கு கூட எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை. அடுத்தடுத்த இந்த விலையேற்றம், மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோத மனப்பான்மையால், ஒவ்வொரு வீட்டிலும் பட்ஜெட்டில் துண்டு விழுந்துள்ளது. துயரத்தில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். காய்கறி முதற்கொண்டு அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தின் விலையும் மனம் போன போக்கில் ஏறுகின்றன. போக்குவரத்து கட்டணம் உயருகிறது.

Also Read: விலைக்கு வாங்கும் பா.ஜ.கவில் இருந்தே விலகிய 2 எம்.எல்.ஏக்கள் : அசாமில் தோல்வி பயத்தில் மோடி- அமித்ஷா!

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளன. பந்தயக்குதிரை போல் இந்த விலை ஏற்றம், அடித்தட்டு மக்களை நசுக்கிப்போட்டு விட்டது. முரட்டுத்தனமான இந்த விலை உயர்வு, அனைத்து தரப்பு மக்களையும் மிரட்டிக்கொண்டிருக்கிறது. இந்த விலையேற்றத்தின் உச்சம், வாகன ஓட்டிகளை கடும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. எது இந்த விலை உயர்வை எண்ணி, பெண்கள் திகைத்துப்போயுள்ளனர்.

எல்லா பொருட்களின் விலையையும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் கீழ்கொண்டு வந்த மத்திய அரசு, பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலையை மட்டும் கொண்டு வராமல், மக்களை சாமர்த்தியமாக ஏமாற்றுகிறது. சமையல் காஸ் விலை ஏற்றம், தாய்மார்களை கண்ணீர் சிந்த வைத்துள்ளது. இந்த விலையேற்றம், தமிழகம், புதுவை உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மத்திய அரசு, சாணக்கியத்தனமாக பெட்ரோல், டீசல் விலையை கடந்த பத்து நாட்களாக ஏற்றம் செய்யாமல், மவுனம் சாதித்து வருகிறது. வாக்குப் பதிவு முடிந்த கையோடு, தனது விளையாட்டை மீண்டும் துவக்கும் என்பது உறுதி. தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள இந்த விலை உயர்வு, மக்களை ஏமாற்றும் செயல் என்பதை அனைவரும் அறிவர். ஜனநாயகத்தில் வாக்குச்சீட்டின் வலிமை அசாத்தியமானது. அந்த அஸ்திரத்தை தமிழகம். உள்பட 5 மாநில மக்கள் கையில் எடுக்க தயாராகி விட்டனர். நிச்சயம் பதிலடி கிடைக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

Also Read: தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் தேடப்படும் குற்றவாளி பா.ஜ.க பெண் தாதா : கண்டுகொள்ளாத புதுவை காவல்துறை!