DMK Government

“முக்குலத்தோருக்கு துரோகம் இழைத்த எடப்பாடி, அ.தி.மு.க அமைச்சர்கள்”: தி.மு.கவுக்கு ஆதரவளிப்பதாக அறிவிப்பு!

சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.கவுக்கு ஆதரவளிப்பதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார். முக்குலத்தோர் புலிப்படை இளைஞரணி செயலாளர் அஜய் வாண்டையார், இன்று, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் ஆதரவுக் கடிதம் வழங்கினார்.

சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கருணாஸ், “தமிழகத்தில் சாதி, மத வாரியாக கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் வலியுறுத்தி வருகிறேன். மத்திய, மாநில அரசுகள் இக்கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக நம்பவைத்து கழுத்தை அறுத்துவிட்டன.

முக்குலத்தோருக்கான இட ஒதுக்கீடு குறித்த எங்களது கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி புறந்தள்ளியுள்ளார். இதற்கு எங்கள் சமூகத்தைச் சேர்ந்த எட்டு அமைச்சர்களும் துணை போயிருக்கின்றனர்.

அரசியல் ஆதாயத்திற்காக வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு அவசர அவசரமாக வழங்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். எனவே அ.தி.மு.க கூட்டணியிலிருந்து முக்குலத்தோர் புலிப்படை கட்சி வெளியேறுகிறது. அ.தி.மு.க செய்த துரோகத்தை மக்களிடையே எடுத்துக் கூறி பிரச்சாரம் செய்வோம்.” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று முக்குலத்தோர் புலிப்படை இளைஞரணி செயலாளர் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் ஆதரவுக் கடிதம் வழங்கினார்.

அ.தி.மு.க அரசு, தேர்தல் நேரத்தில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தது வாக்குகளைக் குறிவைத்துத்தான் என பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாகக் கூறி கருணாஸ் கூட்டணியில் இருந்து வெளியேறியிருப்பது தென்மாவட்டங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Also Read: #Exclusive: பரபரக்கும் இறுதிநேர தேர்தல் களம் - திமுக கூட்டணியில் யார் யார்? யார் ஆதரவு? எத்தனை தொகுதிகள்?